Vஅணுகுமுறைதான் தீர்மானிக்கிறது!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

மகா பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தற்போது பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. மகா கணிதத்தைத் தவிர அனைத்து பாடங்களிலும் 100க்கு 90க்கு மேல் எடுப்பாள். ஆனால், கணிதத்தில் மட்டும் 60ஐத் தாண்டியதில்லை.

கணிதத்தில் மட்டும் ஏன் மார்க் எடுக்க முடியவில்லை என்று கேட்டேன்.

உண்மையில் தனக்குக் கணிதத்தைவிட அறிவியல்தான் கடினமாக இருந்தது என்றாள் மகா. ஆனால், தற்போது அதுதான் படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிமையாக இருக்கிறது என்று சொல்லி அதற்கு விளக்கமளித்தாள்.

“இதற்குக் காரணம் எனது அறிவியல் ஆசிரியர் சுரேஷ்தான். முதல் டெஸ்டில் 40க்கும் குறைவாகத்தான் மார்க் எடுத்தேன். என்னை ஆசிரியர் எதுவும் சொல்லவில்லை. என்னை அழைத்துச் சில எளிமையான பாடக் குறிப்புகளைத் தந்து அதன்படி படிக்கச் சொன்னார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்விலும் குறைவாகத்தான் மதிப்பெண் எடுத்தேன். அப்போதும் அவர் திட்டவில்லை. மீண்டும் என்னை அழைத்துப் பாடங்கள் குறித்து விளக்கினார். இதுபோலத்தான் ஒவ்வொரு முறை தேர்வு முடிவிலும், நான் எதை எளிதில் புரிந்துகொள்கிறேன், என்னால் எதைப் படிக்க முடியும் எப்படிச் சொல்லிக் கொடுத்தால் என் மனதில் பதியும் என்பதை உணர்ந்து பாடம் கற்று கொடுப்பார். 40 மார்க் எடுக்கிற மாணவர்களிடமும் 90 மார்க் எடுக்கிற மாணவர்களிடமும் ஒரே மாதிரியாகத்தான் நடந்துகொள்வார். எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளவில்லையே என்று சலித்து விட்டுவிடாமல் எங்களுக்கு ஏற்றவாறு பாடங்களை எடுப்பார். நாளடைவில் அறிவியல் பாடம் எளிமையாக மாறிவிட்டது” என்றாள்.

ஆனால், கணித ஆசிரியர் பாடம் எடுப்பதோடு சரி. மதிப்பெண் குறைவாக எடுத்தால் வகுப்பு முன்பு நிற்கவைத்து, எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் உனக்குப் புரியாது எனக் கண்டிப்பார். மதிப்பெண் குறைந்ததை மற்ற ஆசிரியர்களிடம் சொல்லிக் காட்டுவார். அதனாலேயே அவரது சப்ஜெட்டைப் படிப்பதில் அலர்ஜி வந்துவிட்டது என்றாள் மகா.

இந்த இரண்டு ஆசிரியர்களின் அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசத்தில் மிகப் பெரிய பாடம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் முன்னேற்ற வேண்டுமென்றால் அதில் அவருடைய குறையை எண்ணி அவருக்குத் தாழ்வுமனப்பான்மையும் பதற்றமும் ஏற்படுத்தக் கூடாது. எதிர்மறையான மனப்பான்மை வளர்ந்துவிட்டால் நேர்மறையான மாற்றம் ஏற்படுவது மிக மிகக் கடினம்.

வாழ்க்கைக்கும் இது பொருந்தும் என்று தோன்றுகிறது.

**- கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment