vஅஞ்சல் துறை தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!

Published On:

| By Balaji

தபால் துறையில் இன்று நடைபெறும் தேர்வுகளுக்குத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்துள்ளது.

இந்திய தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும். இரண்டாம் தாளுக்கான வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து அந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை நேற்று முன்தினம் சுற்றறிக்கை வெளியிட்டது. தமிழகத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதிலும் மாற்றம் செய்யப்பட்டது. போஸ்ட்மேன் உள்ளிட்ட 1,000 பணியிடங்களுக்கான தேர்வு இன்று (ஜூலை 14) நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு தமிழகத் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசு இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்று தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.

இந்த நிலையில் தபால் துறை தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த ஆசீர்வாதம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “தபால் துறையில் காலியாக உள்ள 1,000 பணியிடங்களை நிரப்புவதற்காக நாளை (இன்று) எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நடந்த தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட 15 மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தேர்வர்கள் தமிழ் வழியிலேயே படித்தவர்கள். இவர்களால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வுகளை எதிர்கொள்வது பெரும் சிரமமாக இருக்கும். இதனால் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தபால் துறை பணிகளுக்கான தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும். இதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து, நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தபால் துறை தேர்வுகளை நடத்தத் தடையில்லை என்று உத்தரவிட்டுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், தேர்வு இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படுவது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து, வழக்கை வரும் 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share