�திருச்சி அகதிகள் முகாமிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் முபின் என்ற உசேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வந்தார். அவருடன் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் பணியாற்றினர். அவர்கள் எவரிடமும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. இது குறித்துப் புகார் எழுந்ததையடுத்து, அனுமதியின்றி இந்தியாவில் வசிப்பதாகக் கூறி அவர்களைக் கைது செய்தனர் போலீசார். அப்போது, முபினையும் சேர்த்துக் கைது செய்துவிட்டனர்.
ஆனால், தான் ஓர் இந்தியக் குடிமகன் என்பதற்கு ஆதாரமாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வருமான வரி கணக்கு அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளதாகத் தெரிவித்தார் முபின். இதுபற்றி அதிகாரிகளிடம் தன் தரப்பு நியாயங்களைக் கூறினார். ஆனால், முபின் அளித்த ஆதாரங்களை ஏற்காத போலீசார், திருச்சியில் உள்ள வெளிநாட்டு அகதிகள் முகாமில் அவரை அடைத்து வைத்தனர். இதையடுத்து, அவர் தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
நேற்று (மார்ச் 9) நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் இந்த வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.�,