}ரூ.2 கோடி மதிப்புள்ள ஜியோமி செல்போன்கள் கொள்ளை!

Published On:

| By Balaji

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மும்பைக்கு கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Xiaomi mobile போன் உற்பத்தி ஸ்ரீபெரும்புதூரிலும் நடைபெறுகிறது. இங்கிருந்து நேற்று முன்தினம் ஒரு கண்டெய்னர் லாரியில் மொபைல் போன்கள் மும்பைக்கு எடுத்துச்செல்லப்பட்டன. லாரியை உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

ஆந்திரா – தமிழ்நாடு எல்லையான சித்தூர் அருகே, சென்று கொண்டிருந்த போது, இந்த லாரியை பின் தொடர்ந்து மற்றொரு லாரியில் வந்த கும்பல் வழிமறித்து இர்பானை தாக்கிவிட்டு கண்டெய்னரில் இருந்த செல்போன்களை எல்லாம் அந்த லாரிக்கு மாற்றி கடத்தி சென்றுள்ளது.

வழக்கமாக செல்போன் திருட்டு, செல்போன் பறிப்பு என்பதைத்தான் செய்தியில் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் ஒரு கண்டெய்னரில் எடுத்து செல்லப்பட்ட செல்போன்கள் அனைத்தும் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மர்ம கும்பல், லாரியை வழி மறித்ததும், இர்பானை கட்டிபோட்டு கடுமையாகத் தாக்கி, அவர் கத்தாமல் இருக்க வாயில் துணியை வைத்து அடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மர்ம கும்பல் அங்கிருந்து சென்ற பிறகு, ஒரு வழியாக தப்பித்த இர்பான், நகரி நகர காவல் நிலையத்துக்கு சென்று நேற்று காலை 8.30 மணிக்குப் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, மும்பைக்கு செல்போன்களை ஏற்றிச் சென்றதாகவும், இரவில் பின் தொடர்ந்து மற்றொரு லாரியில் வந்த கும்பல் தன்னை கடுமையாக தாக்கி செல்போன்களை எல்லாம் கடத்தி சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதில் முதல்கட்டமாக நாராயணவனம் மற்றும் புத்தூர் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில், செல்போனை கடத்திச் சென்ற லாரி சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதோடு ஸ்ரீபெரும்புதூர் ஜியோமி நிறுவனத்துக்கு தொடர்புகொண்ட போலீசார் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஜியோமி நிறுவன அதிகாரிகள் மாலை 3.30 மணிக்கு நகரி காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரில் ஆய்வு செய்த போது, கொண்டு செல்லப்பட்ட 16 பண்டில் செல்போன்களில் 8 பண்டில் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடி என்று நிறுவன தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஓட்டுநர் இர்பான் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உண்மையில் செல்போன் திருடு போனதா? அல்லது மர்ம கும்பலுடன் ஓட்டுநருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் இர்பான் தற்போது போலீஸ் கஸ்டடியில் உள்ளார். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share