�
பிரபல ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் மற்றும் அவருடைய வாழ்க்கை துணையான காசி பென்னட்க்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. ஜமைக்காவின் பிரதமர் திங்களன்று இந்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். குழந்தையின் பெயர் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் இதுகுறித்து ”ஓட்டப்பந்தய ஜாம்பவானான உசேன் போல்ட் ,மற்றும் காசி பென்னட் இருவருக்கும் அவர்களுடைய பெண் குழந்தை வருகையையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மார்ச் மாதம் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் விதமாக மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை போல்ட் மற்றும் பென்னட் இருவரும் இணைந்து நடத்தினர். கண் கவரும் வானவேடிக்கைகளுடன் நடைபெற்ற அந்த பார்ட்டியில் பல நட்சத்திர விருந்தாளிகள் கலந்து கொண்டனர். பார்ட்டிக்கு பிறகு உசேன் போல்ட் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நான் ஒரு பெண் குழந்தையின் அப்பா என்று பதிவிட்டு இருந்தார்.
ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் 11 முறை உலக சாம்பியன் விருதையும் அடுத்தடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவரும் ஆவார். அவர் 2008, 2012, 2016 ஆம் ஆண்டுகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 2017 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் தன்னுடைய விளையாட்டு பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது 33 வயதாகும் போல்ட் ஜனவரி மாதம் முதன் முதலாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக தகவலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது
** – பவித்ரா குமரேசன்**�,