sசிறப்புக் கட்டுரை: போலீஸ் அதிகாரம் எதுவரை?

Published On:

| By Balaji

கே.ராமானுஜம், ஓய்வுபெற்ற டிஜிபி

பிரிவு 144 மற்றும் ஊரடங்கு தடை உத்தரவுகளுக்கு இடையில் தொற்று நோய்க் காலங்களில் சட்ட விதிகள் நீர்த்துப்போய்விடக் கூடாது. தவறிழைத்தவர்களைக் காவல் துறையினர் பொது இடங்களில் தோப்புக்கரணம் போடச் சொல்வது போன்ற சில அத்துமீறல்கள் நன்மைக்காகச் செய்யப்படும் சாதாரண உடற்பயிற்சி போன்றது எனப் புறக்கணிக்கப்படுமாயின் அது பெரிய அத்துமீறல்களில் கொண்டு போய் சேர்க்கும்.

எந்தவொரு புதிய நிகழ்வும், புதிய சொற்களை வெளிக்கொணர்வது அல்லது பழைய சொற்களைப் புதுப்பித்தல் எனச் சொற்களஞ்சியத்தை விரிவுபடுத்துகிறது. 2004ஆம் ஆண்டு இந்தியாவில் சுனாமி தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தும் வரையில் சுனாமி என்ற சொல்லை ஒரு சிலரே அறிந்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றும் இதிலிருந்து வேறுபட்டதல்ல. சமூக இடைவெளி, லாக் டவுன், தொற்று நோய் வரைபட ஏற்றக்கோடு சமநிலை அடைதல் போன்ற சுனாமியைவிட பரந்த அளவில் பேசப்பட்டு வரும் சொற்கள் தொடர்புடைய பெருங்கொலையாளியான கொரோனாவுக்கு நன்றி.

ஊரடங்கு, 144 தடை உத்தரவு போன்ற பதங்கள் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஜனதா ஊரடங்குக்குப் பிறகு உரையாடல்கள், சமூக வலைதளங்களில் எனப் பல பரிமாணத்தில் உலா வருகின்றன. 144 என்பது குறிப்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ஐக் குறிக்கிறது. மாவட்ட செயல் நடுவர் (மாவட்ட ஆட்சியர்), கோட்டாட்சியர்கள், செயலதிகாரிகள் அரசால் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின்படி தடை உத்தரவைப் பிறப்பிப்பார்கள். காவல் ஆணையரகம் இருக்கும் இடங்களில் அந்தந்த காவல் ஆணையர் செயலதிகாரியாகச் செயல்பட சிறப்பு அதிகாரம் பெற்றவராவார்.

**

144 தடை உத்தரவு என்றால் என்ன?

**

பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவானது ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது ஓர் இடம் அல்லது பகுதியில் வசிக்கும் நபர்களுக்கோ அல்லது ஓர் இடம் அல்லது பகுதிக்கு வந்துசெல்லும் நபர்களுக்கோ பொருந்தும். இந்த ஆணையானது செயலதிகாரியால் சட்டப்படி பணியமர்த்தப்பட்ட ஒருவருக்கு இடையூறு, எரிச்சல், காயம் விளைவிப்பதை தடை செய்யவோ, மனித உயிர், உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலகம் அல்லது அவதூறு முதலியவற்றை தடுக்கவோ பயன்படுத்தப்படும்.

ஆகவே, ஊரடங்கை அமல்படுத்த இது ஒரு சிறந்த கருவியாகும். குறிப்பாக ஊரடங்கு விதிகளை அமல்படுத்த ஒரு தனிமனிதன் செய்ய வேண்டியது / செய்யக் கூடாதது எது என்பதை சொல்கிறது.

சாதாரண காலங்களில் இந்த ஆணையானது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பொதுக் கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை தடை செய்ய பிறப்பிக்கப்படுவதாகும் இந்த சூழ்நிலையில் இந்த ஆணையின்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது.

**

ஊரடங்கு, 144 தடை உத்தரவு வேறுபாடு

**

துரதிருஷ்டவசமாக அதே ஆணை ஊரடங்கு நேரங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கவே பல இடங்களில் பிறப்பிக்கப்படுகிறது. ஊரடங்கு என்ற வார்த்தை வந்ததுமே பொதுமக்கள் மட்டுமின்றி காவல் துறை அலுவலர்களும்கூட குற்ற நடைமுறைச் சட்டம் 144 பிரிவின் கீழ் வரும் அனைத்து ஆணைகளும் ஊரடங்கு எனப் பொருள் கொள்கின்றனர். பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடை செய்யும் ஊரடங்கு உத்தரவுக்கும், பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வழக்கமான உத்தரவுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாத நிலை ஏற்படுகிறது. இது தமிழகத்தைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை. ஏனெனில், 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தருணம் தமிழகத்துக்கு வரவேயில்லை.

ஊரடங்கு பற்றி தெரியாமல் சாலைகளில் நடமாடும் பொதுமக்களை நோக்கி விதிகளைப் பற்றித் தெரியாதா என தார்மீக மற்றும் சட்ட உணர்வுகளுடன் கொந்தளிக்கும் காவல் அலுவலர்கள் குறித்து பல வகை வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் காண்கிறோம். மாவட்ட ஆட்சியர் அல்லது செயலதிகாரியின் உத்தரவு உண்மையில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடை செய்வதாகும். சாதாரண மனிதனுக்கு இது பற்றி தெரியாது. துரதிருஷ்டவசமாக இதை அமல்படுத்த வேண்டிய அதிகாரிக்கும் இது தெரியாது.

முறையான காரணங்களுடன் சாலையில் நடமாடுபவர்களை முரட்டுத்தனமாக கையாள்வதும் மற்றும் பொது இடங்களில் தோப்புக் கரணங்கள் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுத்தும் வீடியோ பதிவுகள் பலவற்றையும் காண்கிறோம். விநோதம் என்னவென்றால் இவர்கள் யாரும் இடப்பட்ட ஊரடங்கு ஆணையை மீறியவர்கள் அல்லர்.

**

அதிகாரத்தை கையிலெடுத்த காவல் துறை

**

சில நகரங்களில் காவலர்கள் சாலைகளில் காணப்படும் இருசக்கர வாகனங்களின் முன்பும் பின்பும் வண்ணப்பட்டை அடிப்பதுடன், குறிப்பிட்ட வண்ணம் தீட்டப்பட்ட வாகனங்கள் வாரத்தில் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே வர வேண்டும் என்று சொல்கிறார்கள். இதன் நோக்கம் சாலைகளில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதுதான். இது அர்த்தமுள்ள முயற்சி எனினும் இப்படி வண்ணப்பட்டை எந்த உத்தரவின் அடிப்படையில் செய்யப்படுகிறது என எவருமே கேட்டதில்லை. எந்த அடிப்படையில் வாகனங்களுக்கு வண்ணப்பட்டை தீட்டி, வாகனத்தை சேதப்படுத்தும் அதிகாரத்தை அவர்களாகவே எடுத்துக்கொண்டார்கள்?

இவ்வளவு கடுமையுடன் நடந்துகொள்வதை வாழ்த்துவதும், கைதட்டிப் பாராட்டுவதும் நிகழ்கிறது. சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்கள் இந்த கொடுமையான நோய் பரவுதலின் தாக்கம் குறித்து கவலைகொள்வதுடன் கொரோனா என்னும் பெரிய எதிரியுடன் போராடிக்கொண்டிருக்கிறோம், அதற்கிடையில் வெறும் தொழில்நுட்பமும், சட்ட நுணுக்கங்களும் குறுக்கே நிற்கக் கூடாது என ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், காவலர்கள் இதுபோன்ற ஒரு நிலையை எடுக்க இயலுமா?

பிரிவு 144இன்படி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவானது ஒரு நபரை சில நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கச் செய்வது போன்ற தடை அல்லது ஒருவரது மேலாண்மையில் பொறுப்பில் உள்ள சில சொத்துகளின் மீது சில சட்டப்படியான உத்தரவை நிறைவேற்றுவது என்பதாகும். இதில் ‘சில’ என்ற சொல் மூன்று இடங்களில் வருகிறது. ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரியின் இசைவுக்கேற்ப அதை எடுத்துக்கொள்ளலாம். சில என்பதற்கு சரியான விளக்கம் இல்லாத காரணத்தால் பல்வேறு பொருள்களில் பயன்படும்.

உச்ச நீதிமன்றம் பிகார் மாநில கே.கே.மிஸ்ரா வழக்கில், “சுதந்திரம் மற்றும் நீதிக்கான அடிப்படை கொள்கைகளை எதிர்க்கும் எந்தவொரு கட்டுப்பாடும் நியாயமானதாக இருக்க முடியாது” என்று கூறியுள்ளது. குறிப்பிட்ட நடவடிக்கை அல்லது செயல் அல்லது குறிப்பிட்ட ஆணை என்பதன் அடிப்படை பொருள் அவை சுதந்திரம் மற்றும் நீதிக்கான அடிப்படைக் கொள்கைகளுடன் கூடிய ஒத்திசைவைப் பொறுத்தே அமையும்.

பொதுமக்கள் ஒருவருடைய உயிர், உடல்நலம், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய சில செயல்களை செய்வது தடை செய்யப்பட வேண்டும் என அலுவலர்கள் நம்புகிறார்கள். பிரிவு 144 குற்ற நடைமுறைச் சட்டத்தில் உயிர், உடல்நலம், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுவதைத் தடுக்க சில செயல்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்ற கருத்து அடங்கும்.

அதற்காக பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் ஊரடங்கு உத்தரவு போன்ற தவறான உத்தரவை அமல்படுத்த அவசியமில்லை. நேரடியான உத்தரவே போதுமானது. ஆனால் உரிய தேவைக்கேற்ப விதிவிலக்குகளுடன் அமைவது நலம்.

குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் பிறப்பிக்கும் ஆணை, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்ததற்கானது. எனினும், அதைச் செயல்படுத்தும் விதம் மனித உரிமைகளுக்கு எதிரானது என உடனே வழக்கு தொடரப்படலாம். கொலையாளியான கொரோனா நோய்க்காக இடப்பட்ட உத்தரவு அப்படி ஓர் எதிர்வினையை சந்திக்க வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் குறைந்த அளவு அமர்வுகளுடன் நடக்கும் நீதிமன்றங்கள் குறித்த நேரத்தில் சமாளிக்க முடிவெடுக்கலாம். எது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் தெளிவும் தேவைக்கேற்ப தெரிந்தெடுத்த சொற்களுடன் கூடிய ஆணையாக இருக்க வேண்டும். பொதுமக்களும் எது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும். செயல்படுத்தும் விளிம்பு நிலையிலுள்ள அதிகாரிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். வீட்டிலேயே தங்குவதற்கான முறையீடு பற்றி செவிசாய்க்க வேண்டும். ஆனால், அதை மீறும்போது எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கை உரிய உத்தரவுடன் எடுக்க வேண்டும்.

**சிறிய அத்துமீறலும், பெரிய அத்துமீறல்களும்**

“உடைந்த ஜன்னல்” கோட்பாடு காவலர்களுக்கும் பொருந்தும். பொதுமக்களை நடுவீதியில் தோப்புக்கரணம் போடவைக்கும் சிறிய அத்துமீறல்கள் குற்றமற்றதாகவும் நல்லெண்ணத்துடனும் பார்க்கப்படும். அதுவே மிகக் கொடுமையான அத்துமீறல்கள் அண்மையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் கடைகளைத் திறந்து வைத்ததற்காக சாத்தான்குளத்தில் இரு நபர்கள் காவல் துறையினரால் கொண்டு செல்லப்பட்டு அது மரணம் வரை சென்றது போன்றதற்கு வழி வகுக்கும்.

சட்டத்தைக் கடைப்பிடிப்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒருவருக்கு மற்றொரு அரசு நிறுவன ஊழியரால் ரூ.100 அபராதம் கட்டச் சொல்லி ஒரு துண்டு சீட்டு அளிக்கப்பட்டது. அதில் குற்றம்: ஊரடங்கு விதிகளை மீறுவது, பிரிவு: காலை நடைப்பயிற்சி என இருந்தது. இது சமூக வலைதளங்களில் சித்திரித்தவையாக இருக்கலாம் அல்லது உண்மையிலேயே அரசு நிறுவன ஊழியராக இருந்து செய்த குற்றம், குற்றப்பிரிவு, அபராதம் விதிக்கும் அலுவலர் பெயர், பதவி எதுவும் குறிப்பிடாத ரசீது அளிக்கப்பட்டால் அது நல்லாட்சி என்பதற்கு சாபக்கேடாக அமையும்.

ஜியோவன்னி பொக்காசியோ தனது ‘தி டெக்கமரான்’ என்னும் நாவலில் 1348ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடுமையான பிளேக் நோய் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். “வேதனையும் துன்பமும் மிக்க எங்கள் நகரத்தில் மனித மற்றும் ஆன்மிகம் குறித்து சட்டமியற்ற தகுதி படைத்தவர்கள் அனைவரும் தன்னிலை தாழ்ந்து அழிவைத் தேடிக்கொண்டனர். அமைச்சர்களும் அலுவலர்களும் பிற மனிதரைப் போன்றே இறந்தோ அல்லது நோயுற்றோ அல்லது கவனிப்பார் யாருமின்றி கைவிடப்பட்டவர்களாகவோ அலுவலகங்களில் எவ்வித பணியும் ஆற்றாமல் அழிந்து போயினர். எனவே அனைவருக்கும் அவரவருக்கு விருப்பமானதைச் செய்ய உரிமை உள்ளது” என்று குறிப்பிட்டார்.

தற்போது அமைச்சர்கள், நிறைவேற்றும் அலுவலர்களுக்கு குறைபாடு ஏதும் இல்லை. எனவே, சட்டம் இயற்றுபவர்களின் மரியாதைக்குரிய அதிகாரம் சிதைவடைவதற்கு எந்த காரணமும் இல்லை. மாட்சிமை தாங்கிய சட்டத்தை இயற்றுபவர்களுக்கு அந்த மாட்சிமை, சட்டத்தை செயல்படுத்துபவர்களாலும், குடிமக்களாலும் அளிக்கப்படுகிறது. சட்ட விதிகளின் கோட்பாடு கொடுநோய் தாக்கக்காலத்தில்கூட மங்காது நிலைபெறட்டும்.

**நன்றி: அவுட் லுக்**

**தமிழில்: எம்.பி.நடராஜன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share