தமிழ்நாட்டில், நவம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு முதல் தற்போது வரை முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், முன்பதிவில்லாமல் இருந்த இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப்பட்டது. இதனால் அவசரமாக வெளியூர் செல்லும் பலரும் சிரமத்தைச் சந்தித்தனர். அதோடு, இதில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் இதில்தான் பலரும் பயணம் செய்வார்கள்.
தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து சேவைகளையும் 100 சதவிகிதம் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 25) தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு தெற்கு ரயில்வேயில் 23 விரைவு ரயில்களில் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்தும், 4 விரைவு ரயில்களில் 10ஆம் தேதியில் இருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை (6 பெட்டிகள்), திருச்சி – திருவனந்தபுரம் (4), திருச்சி – ராமேசுவரம் (4), கன்னூர் – கோவை (4) உட்பட 23 விரைவு ரயில்களில் நவம்பர் 1 முதலும், மங்களூரு – கோவை (4), கோவை – நாகர்கோவில் (4) இரு மார்க்கத்திலும் நவம்பர் 10 முதலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும். பழைய முறைப்படி முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் முன்பதிவின்றி பயணிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியையொட்டி இந்த அறிவிப்பு வெளியானதால், பலருக்கும் இது உதவியாக இருக்கும் என்று மக்கள் கூறி வருகின்றனர்.
**-வினிதா**�,”