கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் பொருளாதார நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. நேற்றுடன் எட்டாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதில், மல்டிபிளெக்ஸ், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க அனுமதி. இதற்குத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.
அக்டோபர் 15 முதல் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி
பொழுதுபோக்கு பூங்காக்கள் , விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.
பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் இருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வருவதைக் காட்டிலும், ஆன்லைன் வகுப்பிலேயே பாடம் கற்க விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்றால் அதுவும் ஊக்குவிக்கப்படும். வருகைப் பதிவு என்பது கட்டாயம் கிடையாது.
திறக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் அந்தந்த மாநில கல்வித் துறையால் வழங்கப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கள மதிப்பீட்டின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறித்து கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை முடிவெடுக்கலாம்.
சமூக / கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு / கலாச்சார / மத / அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.
மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு வெளியே தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் கிடையாது. அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
**-கவி**�,