இ-சிகரெட்: பள்ளி கல்லூரிகளில் ஆய்வு நடத்த உத்தரவு!

Published On:

| By Balaji

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இ-சிகரெட்டுகள் பயன்பாடு இருக்கிறதா என்பது குறித்து மாநில அரசுகள் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இ-சிகரெட்டுகள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்குச் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதால், அதனைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க கோரி கொல்கத்தா நீதிமன்றத்தில் இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இதற்கிடையில், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களிடையே இ-சிகரெட்டுகள் பயன்பாடு 77.8 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் தரவுகள் சுட்டிக்காட்டியது. நடுநிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் சுமார் 48.5 சதவிகிதத்தினர் இ-சிகரெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்தது.

இந்தநிலையில் கல்வி நிறுவனங்களில் இ-சிகரெட் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை தேவை என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மத்திய சுகாதாரத் துறையின் செயலாளர் பிரீத்தி சுதன் மாநில அரசுகள் மற்றும் மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”மத்திய அரசு இ-சிகரெட் பயன்பாடு மற்றும் உற்பத்திக்கு அவசரச் சட்டம் மூலம் தடை விதித்திருக்கிறது. ஆகவே இந்தத் தடை சரியாக அமல்படுத்த அனைத்து துறைகளும் சரியான நடவடிக்கையை எடுக்கவேண்டும். குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரிகள் இ-சிகரெட் பயன்பாடு மற்றும் உபயோகம் குறித்து மாதம் தோறும் ஆய்வு நடத்தவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share