பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

Published On:

| By Balaji

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் கண்டறிந்து தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனாவால் 30,071 குழந்தைகள் அநாதை ஆக்கப்பட்டுள்ளதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொரோனா இரண்டாவது அலையின்போது, கடந்த ஏப்ரல் முதல் மே 28ஆம் தேதிக்குள் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்ததாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குப் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி கடந்த மே மாதம் வெளியிட்டார். இந்த குழந்தைகள் 23 வயதை பூர்த்தி செய்யும்போது, ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியத்தில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதும் அவற்றில் ஒன்றாகும்

இந்த நிலையில், இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் இன்டிவர் பாண்டே ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், “கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியத்தில் இருந்து உதவி பெற தகுதி பெறுவார்கள். அந்தக் குழந்தைகளை அடையாளம் காணுமாறு மாவட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

அந்தக் குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்வதற்காக ஒரு பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்கள் உடனடியாக உதவி பெற வழி பிறக்கும். பிரத்யேக உதவி மையமும் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, சைல்டுலைன் போன்ற அமைப்புகளின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர்கள் அடையாளம் காண வேண்டும். அத்தகைய குழந்தைகளைத் தேர்வு செய்து குழந்தைகள் நலக்குழு சிபாரிசு செய்யலாம். அதைப் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது மாவட்ட கலெக்டரின் பொறுப்பாகும். மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share