கோவை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்குப் பொறியாளர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பித்த செய்தி வேலைவாய்ப்பின்மையின் தீவிரத்தை எதிரொலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 1,500 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 நிரந்தர துப்புரவு பணியாளர் வேலைக்கு கோவை மாநகராட்சி விண்ணப்பங்களை வரவேற்றது. அதன்படி 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான நேர்காணல் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் புதன்கிழமை(நவம்பர் 27) நடைபெற்றது. இதற்காக வந்த விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டன.
இந்த வேலைக்கு குறைந்தபட்ச வயது 21 என்றும் அதிகபட்ச வயது 56 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். துப்புரவு பணிக்கான கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் நேர்காணலுக்கு வந்த 70 சதவீதம் பேர் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.சி. படித்திருந்தனர். மேலும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளும் குவிந்தனர்.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, “துப்புரவு பணியாளர்களுக்கான வேலைக்கு நடந்த நேர்காணலில் 2 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். இன சுழற்சி அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடிப்படை சம்பளம் ரூ.15,700 மற்றும் அலவன்சுகள், படிகள் சேர்த்தால் வேலையில் சேரும் போது மாத சம்பளம் ரூ.20 ஆயிரம் கிடைக்கும். அதிகபட்சம் அதாவது அனுபவம் வாய்ந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்” எனக் கூறினார்.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இன்றி தவித்துவருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு பட்டங்கள் பெற்றவர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் கூட இந்த நேர்காணலுக்கு வந்திருக்கும் அவல நிலை அதிர்ச்சியளித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று(நவம்பர் 29) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் எல்லாம், ஏற்கனவே ஏதாவது ஒரு ‘செயற்கைக் காரணத்தைச்’ சுட்டிக்காட்டி, ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும், பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
மத்திய – மாநில அரசுகள் ஐ.டி ஊழியர்களின் பணிக்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து – அதைத் தடுப்பதற்கு அக்கறை காட்டவும் இல்லை, கவலைப்படவும் இல்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சக்கட்டம்தான்; பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் மிகப் பரிதாபமான கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது” என தெரிவித்திருந்தார்.
�,