வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: பொருளாதார வல்லுநர்கள் கவலை!

Published On:

| By Balaji

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் 7.0% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை டிசம்பரில் 7.9% ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

கொரோனா காரணமாக பல தொழில்கள் முடங்கியதால், ஒருபக்கம் மக்கள் வேலையை இழந்தனர், மறுபக்கம் சம்பளம் குறைக்கப்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் CMIE என்ற அமைப்பு வேலைவாய்ப்பின்மை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தற்போது CMIE அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்தாண்டு நவம்பரில் 7.0% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை டிசம்பரில் 7.9% ஆக அதிகரித்தது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.2% இல் இருந்து 9.3% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 6.4% இலிருந்து 7.3% அதிகரித்துள்ளது.

பல மாநிலங்களில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் பரவல் மற்றும் அதன் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால், தெற்காசிய நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் மாறுபாடு, முந்தைய காலாண்டில் காணப்பட்ட பொருளாதார மீட்சியை பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.32 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,