பொறியியல் படிப்பில் பகவத் கீதை: வரவேற்கும் அமைச்சர்

Published On:

| By Balaji

பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் 2019ஆம் ஆண்டுக்காக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தனது புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பொறியியல் மாணவர்களின் மூன்றாவது செமஸ்டரில் தத்துவவியல் பாடம் இடம்பெறும். தத்துவவியல் பாடத்தில் நான்காவது யூனிட்டில் பகவத் கீதையில் அர்ஜுனருக்கு, கிருஷ்ணர் வழங்கிய போதனை உள்ளிட்டவை பாடமாக இடம்பெற்றுள்ளது.

ஆனால், இதற்கு திமுக, மார்க்சிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அனைத்து மத மாணவர்களும் படிக்கும் ஒரு படிப்பில் குறிப்பிட்ட மத போதனையை புகுத்துவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்தது.

மார்க்சிஸ்டின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “பகவத் கீதையை பாடமாக வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. மார்க்ஸின் புத்திரர்களுக்கும், கால்டுவெல்லின் புத்திரர்களுக்கும் இந்தியா தொடர்புடைய அனைத்தையும் எதிர்ப்பது வழக்கமாகிவிட்டது. தங்களின் கொள்கைகளில் அவர்கள் காட்டும் அளவுகடந்த விசுவாசம் துரதிருஷ்டவசமானது” என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பகவத் கீதை பாடத்திற்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 26) செய்தியாளர்களிடம் மாஃபா பாண்டியராஜன், “பகவத் கீதையை பாடமாக அறிவித்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. இதுகுறித்து பல்கலைக் கழகம் முடிவெடுத்திருந்தால் அது நல்ல விஷயம். பகவத் கீதையை மதம் சார்ந்த புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒரு பண்பாடு சார்ந்த புத்தகமாக பார்க்கிறேன். பாரத பண்பாட்டுக்கு ஆழமான நங்கூரமாக இருப்பது பகவத் கீதை. அதனை இஞ்சினீயரிங் மாணவர்களுக்கு பாடமாக வைப்பதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share