சோர்வு நீக்கி, சுறுசுறுப்பு தரும் அற்புத உணவு கஞ்சி. இன்றைக்கும் தமிழ்நாட்டு கிராமங்களில் பருவம் வந்த பெண்களுக்கு உளுந்தங்கஞ்சியைக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியைத் தூண்டும். குழந்தைகளுக்கு காலையிலோ, மாலையிலோ வழங்குங்கள்.
**எப்படி செய்வது?**
ஒரு கப் அரிசி மற்றும் அரை கப் உளுத்தம் பருப்பை நன்கு கழுவவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி அத்துடன் பொடியாக நறுக்கிய 10 பூண்டு பற்கள், ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
பின்பு குக்கரை திறந்து லேசாக கடைந்து, பின் ஒரு டீஸ்பூன் சுக்குப் பொடி, தேவையான அளவு உப்பு, அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த அரை லிட்டர் பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கி சாப்பிடவும்.
**சிறப்பு**
இது பெண்ணின் மாதவிடாயைச் சீராக்கும்; இடுப்பு எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுந்து கஞ்சி சிறந்த உணவு.�,