உள்ளாட்சித் தேர்தல்: நிர்வாகிகளிடம் எடப்பாடி சொன்ன முக்கியச் செய்தி!

Published On:

| By Balaji

சேலம் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (அக்டோபர் 30) இரவு, சேலம் புறநகர் மற்றும் மாநகர மாவட்ட நிர்வாகிகள், வார்டு, ஒன்றியம், நகரம், பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கு, ‘அக்டோபர் 31 காலை நெடுஞ்சாலை நகர் வீட்டுக்கு வாருங்கள்’ என்று திடீர் அழைப்புக் கொடுத்திருந்தார்.

முதல்வர் அழைப்பை ஏற்று இன்று அதிகாலையிலிருந்து, முதல்வர் வீட்டை நோக்கி டூவீலரிலும், காரிலும், ஆட்டோவிலும் பயணித்தார்கள் கட்சி நிர்வாகிகள். வந்தவர்கள் அனைவருக்கும் சூடாக டீ, காபி என்று வழங்கப்பட்டது. காலை சரியாக 9.10 மணிக்கு வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வந்தார் முதல்வர். கட்சி நிர்வாகிகள் அனைவரும் வணங்கி வரவேற்றுள்ளார்கள்.

முதலில் புறநகர் மாவட்டத்திலிருந்து வந்துள்ள அனைத்து நிர்வாகிகளையும் அழைத்துப் பேசினார் எடப்பாடி.

“டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும், அதில் நாம் 100% வெற்றிபெற்றாகவேண்டும். ஜனவரி மாதம் பதவியேற்றுக்கொண்டு, மகிழ்ச்சியோடு பொங்கல் கொண்டாடுங்கள். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். இனி கோஷ்டிகள் வேண்டாம், உங்களுக்கு என்ன குறை என்று என்னிடம் சொல்லுங்கள் நான் சரிசெய்துவைக்கிறேன். உங்கள் ஊராட்சியில், ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர்களுக்கு யாரைத் தேர்வு செய்வது என்று ஒரு பட்டியல் கொடுங்கள்.

நீங்கள் பெயர் பட்டியல் கொடுக்கும் வேட்பாளர், மக்கள் செல்வாக்குள்ளவராக இருக்கவேண்டும், மக்களோடு நெருக்கமாக இருக்கவேண்டும், அப்படிப் பட்ட பெயர் பட்டியல் தயார் செய்துகொடுங்கள். நாம் உள்ளாட்சித் தேர்தலில் முழுமையாக வெற்றிபெற்றாக வேண்டும். அவர் உறவினர், இவர் உறவினர் என்றெல்லாம் சொல்லக்கூடாது, உங்களுக்கு என்னவோ அதை நான் செய்வேன். வேட்பாளர்கள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.

நான் சென்னைக்கு போய்விட்டு மீண்டும் 11ஆம் தேதி வருவேன், அன்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடியவர்களின் பெயர் பட்டியல் தயாராக இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக மாநகர மாவட்ட பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர், வட்ட செயலாளர், முன்னாள் கவுன்சிலர்கள் என அழைத்து, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்களிடம் சொன்னதையே திரும்பச் சொல்லியுள்ளார்.

கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை. கூட்டம் முடிந்து 10.50க்குள் வீட்டுக்குள் சென்று உடையை சரிசெய்துகொண்டு சேலம் விமானநிலையத்திற்குப் புறப்பட்டார் எடப்பாடி.

சென்னை விமான நிலையத்தில் முதல்வரின் விமானம் இன்று பகல் 12.44 மணிக்கு தரையிறங்கியது, 12.52க்கு வெளியில் வந்தார். விமானநிலையத்தில் முதல்வரை வரவேற்க நூற்றுக்கும் குறைவான தொண்டர்களே காணப்பட்டார்கள். அவர்கள் முதல்வரை பார்த்து கை அசைக்க, பதிலுக்கு கையசைத்தபடி புறப்பட்டார் முதல்வர்.

முதல்வரை வரவேற்க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் யாரும் வரவில்லையா என்று விசாரித்தபோது, “ முதல்வர் ஏர் போர்ட்டுக்கு யாரும் வரவேண்டாம் என்று நேற்று இரவே சொல்லிவிட்டார்” என்றனர்.

வீட்டுக்குச் சென்றவர், அமைச்சர்கள், அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாகவும், வேட்பாளர்கள் தேர்வு செய்வது சம்பந்தமாகவும் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருவதாக சொல்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் மூடுக்கு வந்துவிட்டார் எடப்பாடி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share