கடந்த ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது மரபியல் மாற்றம் பெற்று வேகமாகப் பரவி வருவதாகப் பிரிட்டன் அரசு தெரிவித்தது. இதன் காரணமாகப் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் தடை விதித்து வருகின்றன.
அந்தவகையில் இந்தியாவில் டிசம்பர் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரைச் சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக வரலாம் என்பதால் மாவட்ட எல்லைகளில் போலீசாருடன் சுகாதார பணியாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத் துறை தரப்பில், கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த 2,756 பயணிகள் பெயர் விலாசம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இரு தினங்களுக்கு முன்பு 218 பேரும், இரு வாரத்திற்கு முன்பு 1,791 பேரும், அதற்கு 2 வாரத்திற்கு முன்னதாக தமிழகம் வந்த 965 பேரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து நாடு திரும்புவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னதாக பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வந்தவர்கள். அவர்கள் 14 நாட்கள் வீட்டுத் தனிமையிலும் இருந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும் என்பதால் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது” என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில் அதுதொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் வரும் 28ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
**-பிரியா**
�,