கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போரானது 117ஆவது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையாக முயற்சித்து வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும் ரஷ்யாவுக்கு இணையாக எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக, ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உக்ரைன் தலைநகர் கீவ்வில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஷ்யா தற்போது ஆற்றின் கிழக்குப் பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய படைகளின் தாக்குதல்களை உக்ரைனின் வீரர்கள் தடுத்து வருகின்றனர். இந்த வாரத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் அதற்கு தயாராகவும் இருக்கிறோம். உக்ரைனுக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் நாங்கள் திரும்பப் பெறுவோம். உக்ரைன் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பான நாடாக மாறும்.” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் போர் இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆகையால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கடந்த வாரம் தெரிவித்தார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் ராணுவம் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து ராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.