இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்போது உச்சத்தை அடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) அமைக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில், வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, இந்தியாவில் வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்குத் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது. 34 நாட்களில் உச்சம் அடைய வேண்டிய வைரஸ் தொற்று பாதிப்பு தற்போது 74 நாட்கள் தாமதமாகி இருப்பதாகவும், இதனால் நவம்பர் மத்தியில்தான் இந்தியாவில் கொரோனா உச்சம் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை 97 சதவிகிதத்திலிருந்து 67 சதவிகிதமாகக் குறைக்க ஊரடங்கு உதவியது. இதன்மூலம் சுகாதார உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவகாசம் கிடைத்துள்ளது.
எனினும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் வரும் நவம்பர் முதல் வாரம் வரையிலான தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். நவம்பர் மத்தியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்பதால் தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகள் 5.4 மாதங்களுக்கும், ஐசியு படுக்கைகள் 4.6 மாதங்களுக்கும், வென்டிலேட்டர்கள் 3.9 மாதங்களுக்கும் தட்டுப்பாட்டுடன் இருக்கும்.
தொற்று நோய்க்கான மாதிரி அடிப்படையிலான பகுப்பாய்வின்படி, ஊரடங்கு காலத்தில் நோயாளிகளைப் பரிசோதித்துத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான கட்டமைப்பைக் கூடுதல் திறனுடன் மேம்படுத்தப்பட்டிருந்தால் நோய்த் தொற்று உச்சத்தில் இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம் அளவுக்குக் குறையக்கூடும்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் 60 சதவிகிதம் தடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு உயிரிழப்புகள் தீவிர சிகிச்சைக்கான தேவையை முன்கூட்டியே பூர்த்தி செய்ததன் காரணமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தொற்று நோயின் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பு செலவு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.2 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி, புதிதாக 11 ஆயிரத்து 929 பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்து 992 ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 9,195 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது நாளாகத் தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. ஜூன் 9ஆம் தேதி சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பு, ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 883 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21 ஆயிரத்து 614 ஐசியு மற்றும் 73 ஆயிரத்து 469 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு 2,313 சுகாதார மையங்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 37 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 10 ஆயிரத்து 748 ஐசியு படுக்கைகள் , 46 ஆயிரத்து 635 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. இதுமட்டுமின்றி 7,525 கோவிட் கேர் சென்டர்களில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 642 படுக்கைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 21 ஆயிரத்து 494 வென்டிலேட்டர்களும், 60 ஆயிரத்து 848 புதிய வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**
�,