அரசின் உத்தரவை மீறி 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் தேர்வு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது,. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என அனைவரும் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு எச்சரிக்கை விடுத்தது.
அதோடு 1ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாய தேர்ச்சி அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்காகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில் பள்ளிகள் திறக்கும் போது 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்திதான் தேர்ச்சி நடைபெறும் என்று பெற்றோர்கள் மொபைலுக்கு தனியார் பள்ளிகள் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இந்த தேர்வுக்காகக் கட்டணம் வசூலிக்க இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற செயல்பாடுகளை எச்சரித்து தமிழ்நாடு அனைத்து மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநரகம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளித் தேர்ச்சிப் பதிவேட்டில் உரியப் பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசால் அனைத்துவகைப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்புமுதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி சில மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்கள் தேர்வு வைத்து அதனடிப்படையில் தேர்ச்சி வழங்குவது என்பது அரசின் ஆணையினை மீறிய செயலாகும்.
இதுவிவரம் மிகக் கடுமையாக நோக்கப்படும் என்றும், விதிகளின்படி உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
**-கவிபிரியா**�,