கவுசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
உடுமலைப் பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில், 2017 டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய திருப்பூர் சிறப்பு நீதிமன்றம், முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, குற்றவாளிகள் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகியோரை விடுவித்தும் உத்தரவிட்டது.
தூக்குத் தண்டனைக்கு எதிராக 6 பேரும், 3 பேரின் விடுதலைக்கு எதிராக காவல் துறை தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தனர். மீதமுள்ள 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் விடுதலைக்கு எதிரான காவல் துறையின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சங்கர் கொலைக்கு நேரடிப் பொறுப்பானவர்கள் ஆயுள்தண்டனை பெற்றவர்களா அல்லது விடுதலை செய்யப்பட்டவர்களா எனக் கேள்வி எழுப்பிய கவுசல்யா, ““எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பான். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காதே” என்று சாடியிருந்தார். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும்வரை ஓயமாட்டேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுவிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,