மகாராஷ்டிராவின் 18ஆவது முதல்வராகப் பதவியேற்ற உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநில முதல்வராக நேற்று (நவம்பர் 28) மாலை பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம், மும்பையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுடன் மாநில அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
**பதவியேற்ற ஆறு அமைச்சர்கள்**
பதவியேற்பு விழாவில், உத்தவ் தாக்கரேவுடன் சிவசேனாவைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியை (என்சிபி) சோ்ந்த ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பல், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பாலாசாஹேப் தோராட், நிதின் ரௌத் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றனா். அவா்களுக்கான துறைகள் பின்னா் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்சிபியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் நிருபர்களிடம் பேசும்போது, “அரசுக்குள் முதல்வர் உட்பட ஆறு அமைச்சர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு இருக்கும். ஒரு வெளிப்புறக் குழு இருக்கும், இது அரசாங்கத்தின் குறிக்கோள்களை அடைய வழிகாட்டும்” என்றார்.
மகாராஷ்டிர மாநில முதல்வரானதும் உத்தவ் தாக்கரே, மும்பையில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். அவருடன், அவரது மனைவி ரேஷ்மி, மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்டோரும் வழிபட்டனர். அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்றார் உத்தவ்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய அரசின் முதல் முடிவாக, சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவின் தலைநகராக இருந்த ராய்காட் நகரை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விவரங்களை இரண்டு நாட்களில் தரும்படி அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். அவர்கள் அளிக்கும் தகவலின்படி விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சிவசேனா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படும் என்பதை மாநில மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்கப்படும்” என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
அப்போது, சிவசேனா தற்போது மதச்சார்பற்ற கட்சியாகிவிட்டதா எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த தாக்கரே, “மதச்சார்பின்மை என்றால் என்ன? அரசியலமைப்பில் என்ன வரையறை இருக்கிறதோ அதுதான்” எனப் பதிலளித்தார்.
**மோடி வாழ்த்து**
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் ஜி-க்கு வாழ்த்துக்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக விடாமுயற்சியுடன் நீங்கள் பணியாற்றுவீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
**ஸ்டாலின் வாழ்த்து**
பதவியேற்பு விழாவுக்கு பின் ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் “மகாராஷ்டிராவில் புதிய அரசு அங்கு வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன். மாநில சுயாட்சி, கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் உத்தவ் தாக்கரே, நம் அனைவருடன் இணைவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
�,”