இ பாஸ் பெறும் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னை மாநகராட்சி முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்வதற்குப் பெறப்படும் இ பாஸ் நடைமுறைகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் எளிமையாக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும், 18,853 பேர் இ பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 18,823 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 7,8,10,11,13 ஆகிய மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பயண அனுமதி பெற்று வரும் நபர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாகத் தொழிற்சாலைகள் மற்றும் இதர அலுவலகங்களில் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரித்துச் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களில் சென்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் வருவதும் அதிகரிக்கும். எனவே இப்பகுதிகளுக்கு வருபவர்களின் தகவல்களைச் சேகரித்து முறையாக அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சியின் வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீதும், வெளியிடங்களுக்கு வரும் போது முக கவசம் அணியாதவர்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,