தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று தோஹாவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழப்பு, தொழில் பாதிப்பு, பொது நிகழ்ச்சிகள் ரத்து என உலகையே நடுங்கவைக்கும் கொரோனா வைரசால் இந்தியாவில் 34 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த 45 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஓமன் நாட்டில் சுமார் 12 ஆண்டுகள் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்ததாகவும் அவர் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 27ஆம் தேதி சொந்த ஊர் வந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் சளி அறிகுறியுடன் மருத்துவமனைக்குச் சென்றதால் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிறுவனத்திற்கும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கும் மருத்துவ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தையும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த அந்த சிறுவன் தனது தந்தையுடன் விமானத்தில் வந்துள்ளார். பயணிகளுக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட் எடுக்கும்போது மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு வைரஸ் அறிகுறி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
உடனே அச்சிறுவன் விமான நிலையத்திலிருந்து சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஆய்வகங்களுக்கு அனுப்பப்படவுள்ளது.
**கவிபிரியா**�,