கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம், மக்களின் வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கான, கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது.
எனினும் இந்த ஆறுமாத கால கடன் தவணைகளுக்கு வட்டி மீதான வட்டி வசூலிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தது.
இவ்வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த திட்டம் என்பது பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையாகும். சாமானியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை, தாமதப்படுத்துவதன் மூலம் எதையும் எங்களால் பெற முடியாது. சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இதனை நடைமுறைப்படுத்த ஒரு மாத கால அவகாசம் அதாவது நவம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ரூ.2 கோடி ரூபாய் வரை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கடன் பெற்று இருப்பதால், திட்டத்தைச் செயல்படுத்த ஒரு மாதம் கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், “சாமானியர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. அதனை விரைவில் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே, 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடிவெடுத்துவிட்டீர்கள், ஆனால் அதற்கான சுற்றறிக்கையை அனுப்புவதற்கு எதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவைப்படுகிறது” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை மக்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசு கையில் தான் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அதற்கு இந்த சலுகையை உடனடியாகச் செயல்படுத்துவது ஒன்றுதான் வழி என்று குறிப்பிட்டு, அடுத்த கட்ட விசாரணையை வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-கவி**�,