uஸ்டெர்லைட் ஆய்வு: முன்னாள் நீதிபதி நியமனம்!

Published On:

| By Balaji

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி வசீப்தார் தலைமையிலான குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், எந்த விதமான உற்பத்திப் பணிகளும் நடைபெறக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த திங்கள்கிழமையன்று(ஆகஸ்ட் 20) பசுமைத் தீர்ப்பாய தலைமை நீதிபதி கோயல் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்படவுள்ள குழுவின் தலைவராக கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதியை நியமிக்கக் கூடாது என்றும் வாதாடினார் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.

இதற்கு, தமிழக அரசுத் தரப்பு மற்றும் மற்றொரு மனுதாரரான வைகோ சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ,“ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் குழு ஆறு வாரங்களுக்குள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச் சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும்” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய, இன்று (ஆகஸ்ட் 23) ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான எஸ்.ஜெ.வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதில், மேலும் இருவர் இடம்பெறவுள்ளனர். அவர்களின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த குழு சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையைப் பொறுத்தே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்பது தெரிய வரும்.

1972ஆம் ஆண்டில் இந்துஜா சட்டக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார் வசீப்தார். இவர் 1980ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலின் வழக்கறிஞராகச் சேர்ந்தார். இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் சிவில், அரசியலமைப்பு, கம்பெனி சட்டம் மற்றும் தொழில் தகராறு தொடர்பான வழக்குகளில் பயிற்சி பெற்றார். 2001ஆம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பெற்றார். இதையடுத்து, 2016ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். 2018ஆம் ஆண்டு மே மாதம், இவர் பணி ஒய்வு பெற்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share