�
இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் அறிக்கை இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று மோடிக்கு எதிரான அதிர்வலைகள் மக்களிடையே அதிகரித்துள்ளன. அதற்கு வலு சேர்க்கும் வகையில் சென்ற மாதம் வெளியான வேலையின்மை தொடர்பான அறிக்கையில், இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அறிக்கை இறுதியானது அல்ல எனவும், இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், அதைச் சிறப்பு நிபுணர்கள் குழு ஒன்று பரிசோதித்து இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் அரசு அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எனினும் எந்தத் தேதியில் அறிக்கை வெளியிடப்படுகிறது என்று அவர் தெரிவிக்கவில்லை. 2014ஆம் ஆண்டு மோடி அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதால் வரவிருக்கும் தேர்தலில் மோடி அரசுக்கு ஆதரவு குறையும் சூழல் உள்ளது. எனவே இந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.�,