வால்மார்ட் நிறுவனத்துக்கு வரித் தாக்கல் செய்ய செப்டம்பர் 7 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் 77 விழுக்காடு பங்குகளை 16 பில்லியன் டாலருக்கு ஆகஸ்ட் 2ஆவது வாரத்தில் கைப்பற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் முன்பு பங்குதாரர்களாக இருந்த 44 பேரில் பலர் வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக இதுவரையில் செலுத்தப்படாமல் இருந்த வரியைச் செலுத்துவதற்கு செப்டம்பர் 7ஆம் தேதி வரை காத்திருப்பதாக இந்திய வருமான வரி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “வரி ஆணையத்துக்கு இதுவரை செலுத்தப்படாத வரியைச் செலுத்துவதற்கு வால்மார்ட் நிறுவனத்துக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார். சட்டப் பிரிவு 197இன் படி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை அளித்த பின்னர் செலுத்தப்படாமல் உள்ள வரி சான்றிதழைப் பெறலாம். செலுத்த வேண்டிய அனைத்து வரியையும் முழுமையாகச் செலுத்தி விடுவதாக ஜூலை மாதத்திலேயே வால்மார்ட் நிறுவனம் அரசுக்கு உறுதியளித்திருந்தது.
ஃபிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் பங்கு விற்பனை ஒப்பந்தத்தின்படி, யார் வால்மார்ட் நிறுவனத்துக்குப் பங்குகளை விற்பனை செய்தார்களோ அவர்களே வரி ஆணையத்திற்கு உரிய வரியைச் செலுத்தவேண்டும். சாஃப்ட் பேங்க், நாஸ்பெர்ஸ், வெஞ்சர் ஃபண்ட் அக்சல் பார்ட்னர்ஸ், இ-பே போன்ற நிறுவனங்கள் தங்களது பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளன. ஃபிளிப்கார்ட் நிறுவனர்களுள் ஒருவரான சச்சின் பன்சாலும் தனது பங்குகளை முழுமையாக விற்பனை செய்துவிட்டார்.�,