அரசியலில் அடுத்த கட்ட நகர்வு குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேச்சு பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 12) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகை புயல் வடிவேலுவிடம் ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஏன் அவருக்கே கூட தெரியாது. 2021ல் நான் சிஎம்-ஆகலாம் என்று திட்டம் போட்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பலர் தடையாக இருந்து வருகின்றனர் என்று நகைச்சுவையாகப் பேசியிருந்தார்,
இந்நிலையில் மீண்டும் இன்று (மார்ச் 13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கோயிலுக்கு எதற்கு வருவார்கள் படவாய்ப்புக்காக வந்திருக்கிறீர்களா என்று கேட்டால், கேள்வியா இது” என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசத் தொடங்கினார்.
அவரிடம் ரஜினி, கமல் இருவரில் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு, எனது ஆதரவு எனக்கும், மக்களுக்கும் தான் என்றார்.
நீங்கள் கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு, ” வானவில் கலர்… கொய்யாப் பழம் சின்னம்… கட்சி ஆரம்பித்துவிடுவோ?. நேரம் காலம் வரும் போது பார்ப்போம் ” என்று நகைச்சுவையாகப் பேசியது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
கொரோனா வைரசையும், உங்களையும் குறிப்பிட்டு மீம்ஸ் உலக அளவில் பரப்பப்படுகிறது என்று கேட்டதற்கு, ”நம்மகிட்ட எந்த வைரசும் வராது. ஏனென்றால் மிளகு, சீரகம், திப்பிலி போன்ற நம்மிடம் இருக்கும் உணவு வகைகளால் நமக்கு எந்த நோயும் ஏற்படாது. எனினும் அந்த காலத்திலிருந்த உணவு வகைகள் தற்போது இல்லை. பழைய மருத்துவத்தை எல்லாம் திருப்பி கொண்டுவரவேண்டும்” என்றார்.
மக்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்த அவரிடம், எழுச்சி வரும்போது அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ”நான் பின்னால் இருந்து இயக்குவேன். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். இது அருமையான வார்த்தைகள். சரிதானே. எதோ நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். விட்டுவிடுங்கள். அவர் முதல்வர் ஆகவில்லை என்று சொன்னது உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா?’ அவரை ஏன் உசுப்பேற்றுகிறீர்கள்” என்று செய்தியாளர்களிடமே கேள்வி எழுப்பினார் வடிவேலு.
திரையுலகில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் எப்போது தீரும், பல எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, வயலில் களையை பிடுங்கினால் தானே விளையும். கெட்டவர்களையும் துரோகம் செய்தவர்களையும் கூட சிரிக்க வைப்பவன் தான் வடிவேலு. திரையுலகிலிருந்து நான் தான் ஒதுங்கியுள்ளேன். அவர்கள் ஒதுக்கவில்லை எனக் கூறினார்.
கமல் ஒரு மாமனிதர். திரையுலகத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரை போல் ஒருவரைப் பார்க்க முடியாது. தான் சம்பாதித்த பணத்தைத் திரையுலகுக்காக அழித்தவர். இந்தியன் 2 விபத்தில் அவர் தப்பியது கூட என் குலசாமி அய்யனார் அருள்தான். அவர் படத்தில் விரைவில் நடிக்க வாய்ப்பு வரும். எனக்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை என்றார்.
**கவிபிரியா**�,