�
வருடாந்திர வரி ரிட்டன்களை முறையாகத் தாக்கல் செய்யாத சுமார் 2.25 லட்சம் நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 22,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன.
இதுகுறித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டம், ஒழுங்கு மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சரான பி.பி.சவுதரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “2015-16 மற்றும் 2016-17 நிதியாண்டுகளுக்கான வரி ரிட்டன்களை 2,25,910 நிறுவனங்கள் செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் மீது நிறுவனச் சட்டம் (2013), பிரிவு 248-இன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; இவற்றின் பதிவுகளும் நீக்கப்படும். 2017-18 நிதியாண்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாத 2.97 லட்சம் நிறுவனங்கள் கண்டறிப்பட்டிருந்தன” என்றார்.
கடந்த ஆண்டில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 22,619 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 41,004 நிறுவனங்கள் முறையாகத் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேபோல, தமிழகத்தில் 40,992 நிறுவனங்கள் தங்களது நிதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. வரி தாக்கல் செய்யாத நிறுவனங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 61,149 நிறுவனங்கள் வருடாந்திர வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்யவில்லை. குறைந்தபட்சமாக லட்சத்தீவுகளில் 7 நிறுவனங்கள் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை�,