வாராக் கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் ஆறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி மூலதனத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியப் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.7.34 லட்சம் கோடி வாராக் கடனில் மூழ்கியுள்ளன. இதனால் வங்கிச் செயல்பாடுகளிலும், கடன் வழங்கும் நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வங்கித் துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பாக ரூ.7,500 கோடி மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு ரூ.2,257 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.323 கோடி, தேனா வங்கிக்கு ரூ.243 கோடி, ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு ரூ.2,729 கோடி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவுக்கு ரூ.650 கோடி மற்றும் யூ.சி.ஓ. வங்கிக்கு ரூ.1,375 கோடி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நிதிச் சேவைகள் துறைச் செயலாளரான ராஜிவ் குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம், “போதிய மூலதனம் இல்லாமல் பொதுத் துறை வங்கிகள் துன்பப்படக் கூடாது. எனவே மத்திய அரசு சார்பாக போதிய மூலதனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் செயல்பாடு, வாராக் கடன் பிரச்னைக்கான தீர்வு காணும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை நாங்கள் தீவிரமாகக் கண்காணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
வாராக் கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு கடந்த ஆண்டின் இறுதியில் ரூ.2.11 லட்சம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,