சேரன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் மார்ச் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் திருமணம். சேரன், சுகன்யா, உமாபதி, காவ்யா ஆகியோர் இணைந்து நடித்த அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இந்தப் படத்தை மீண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தை சேரன் இயக்கியதோடு ரசிகர்களின் வீடுகளுக்கு நேரடியாக படத்தின் குறுந்தடுகளை விற்கும் புதிய வெளியீட்டு முறையை உருவாக்கினார். ஆனால் அப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சனரீதியாகவும் வரவேற்பு பெறாமல் போனது. புதிய முறையில் படத்தை வெளியிடுவதில் இருந்த நடைமுறைச் சிக்கல் காரணமாக பொருளாதார ரீதியாகவும் அந்தப் படம் அவருக்கு ஏமாற்றமளித்தது. அதைத்தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான படம் திருமணம்.
இந்தப் படமும் வசூல் ரீதியாக திருப்தியளிக்கவில்லை. மார்ச் 1ஆம் தேதி இப்படத்துடன் அருண் விஜய் நடித்த தடம், ஓவியா நடித்த 90 எம்.எல் உள்பட ஆறு படங்கள் வெளியாகின. இதனால் திரையரங்குகளின் எண்ணிக்கையும் குறைவாக கிடைத்துள்ளது. மேலும் மார்ச் மாதம் தேர்வு காலம் என்பதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்திருக்கிறது. இந்நிலையில் படக்குழு இப்படத்தை ஏப்ரல் 12ஆம் தேதி மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்ட திரையிடலில் 75 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.�,