uரவுடி என்கவுண்டர்: விசாரணை அதிகாரி நியமனம்!

Published On:

| By Balaji

சென்னை மாதவரம் அருகே ரவுடி ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை அதிகாரியாக பொன்னேரி நீதிமன்ற நடுவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி எம்.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு. இவர் மீது பல கொலை வழக்குகள், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இவர் மாதவரத்தில் வசித்து வருகிறார். நேற்று (ஜூன் 14) வல்லரசுவைத் தேடி வியாசர்பாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் சென்றனர். அப்போது, வீட்டில் வல்லரசுவும் அவரது நண்பர் கதிரும் இருந்தனர். போலீசாரைக் கண்டதும் இருவரும் கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதில் ரமேஷ் தப்பித்துவிட, பவுன்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில் 28 தையல்கள் போடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசாரைத் தாக்கிய வல்லரசுவைப் பிடிப்பதற்காக, நேற்று இரவு முழுவதும் ஆய்வாளர்கள் மில்லர், ரவி தலைமையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மாதவரம் பேருந்து நிலையம் அருகே வல்லரசு மறைந்திருக்கும் தகவல் கிடைத்ததையடுத்து, இன்று காலை 4.15 மணியளவில் அவரைச் சுற்றிவளைத்தனர் போலீசார். அப்போது, மீண்டும் கத்தியால் வல்லரசு தாக்க முயன்ற காரணத்தால் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர் போலீசார். இதில் அவர் உயிரிழந்தார்.

துப்பாக்கியால் சுட்டபின்னர் வல்லரசுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. வல்லரசுவின் நெஞ்சுப் பகுதியில் 2 குண்டுகளும், கால் தொடைப்பகுதியில் ஒரு குண்டும் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று வல்லரசு என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக பொன்னேரி இரண்டாம் நீதிமன்ற நடுவர் விஜயலட்சுமியை நியமித்தது தமிழக அரசு. விரைவில் அவர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த என்கவுண்டர் திட்டமிட்ட கொலை என்றும், வல்லரசு கொல்லப்பட்ட இடத்தில் ரத்தத் துளிகள் இல்லை என்றும் வல்லரசு உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வல்லரசுவின் உடலை வாங்க அவர்கள் மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share