நாடு முழுவதும் 25 தொலைதூர ரயில்களில் பயணிகளின் வசதிக்காக ரயில்வேத் துறை புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும்போது, மெனு கார்டு பார்த்து பயணிகள் தாங்கள் விரும்பும் உணவினை ஆர்டர் செய்து சாப்பிடும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்டர் செய்யும் உணவுக்கு பணத்தை ரொக்கமாகத் தர வேண்டிய அவசியம் இல்லை. விற்பனையாளரிடம் உள்ள பிஓஎஸ் கருவியில் (POS machine) கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலம் பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் ஓடுகிற ரயில்களில் அறிமுகம் செய்யப்படும் என ரயில்வே அதிகாரிகள் நேற்று (மே 1) தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் மூலம் பயணிகளுக்கு மூன்று பயன்கள் உள்ளன. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடமிருந்து உணவைப் பெற முடியும். நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவைப் பெற முடியும். உணவுக்கான சரியான தொகையை ரொக்கமாக செலுத்தத் தேவையில்லை; கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.
பெங்களூரு-டெல்லி கர்நாடக விரைவு ரயில், ஜம்முதாவி-கொல்கத்தா சீல்தா விரைவு ரயில், ஹைதராபாத்-டெல்லி தெலங்கானா விரைவு ரயில், ஜெய்ப்பூர்-மும்பை ஆரவாலி விரைவு ரயில்களில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சேவை வழங்குநர்கள் பிஓஎஸ் எந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக நொய்டாவில் உள்ள ஐஆர்சிடிசி மத்திய சமையலறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், பயணிகளிடமிருந்து பின்னூட்டத்தைச் சேகரிக்க ஊழியர்களுக்கு ஆண்ட்ராய்டு டேப்லெட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி ரயிலில் உணவு வகைகள் மற்றும் விலைப் பட்டியலைத் தெரிந்துகொள்ள ‘மெனு ஆன் ரயில்ஸ்’ என்ற ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிவித்திருந்தது.�,