தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, ரஜினி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் ஒரு சில படங்கள் அல்லது ஒன்றிரண்டு ஆண்டுகளில் மார்கெட் இழப்பது சகஜமாக நடந்துவரும் நிலையில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. தனது திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் வெற்றிகளைக் குவித்துள்ள த்ரிஷா முன்னணி நாயகர்கள் பலருடனும் நடித்துள்ளார். ரஜினியுடன் மட்டும் த்ரிஷா இணைந்து நடிக்கவில்லை என்று ஒரு குறை நிலவியபோது தற்போது அதையும் முடித்துக்காட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் சிம்ரன் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் த்ரிஷாவும் ரஜினியின் காதலியாக நடிக்கிறார் என நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம். படக்குழு இன்று ட்விட்டரில் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
கபாலி, காலா ஆகிய படங்களில் ரஜினியின் படங்களில் வழக்கமாகப் பின்பற்றப்படும் சில நடைமுறைகள் மீறப்பட்டன. ரஜினியை அவரது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்கவைப்பது, ரஜினிக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தைப் போல மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கும் திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுப்பது ஆகிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ரசிகர்கள் மத்தியில் இவை கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
ரஜினியின் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என அறிவித்த கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை ரஞ்சித்தின் பாணியிலே இயக்கிவருகிறார். வழக்கமான ரஜினி படமாக அல்லாமல் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளைப் படக்குழுவில் இணைத்துள்ளனர். விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாஸுதின் சித்திக் ஆகியோர் இடம்பெற்றிருப்பதால் அவர்களுக்கும் திரைக்கதையில் முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
�,