உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கரூரில் சேவல் சண்டை போட்டி தொடங்கியது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பூலாம் வலசு கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் சேவல் சண்டை போட்டி உலக அளவில் புகழ்பெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி இது நடத்தப்படுவது வழக்கம். பாரம்பரிய சேவல் இனங்களைக் காக்கும் பொருட்டு நடத்தப்படும் இப்போட்டியானது, 2014ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது, ஒரு சேவலின் காலில் கட்டப்பட்ட கத்தியினால் காயம் ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். இதையடுத்து, இப்போட்டியை நடத்தத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. கடந்த நான்கு ஆண்டுகளாக, பூலாம்வலசுவில் சேவல் சண்டை போட்டி நடத்தப்படவில்லை.
இந்த நிலையில், அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசுவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் சேவல் சண்டை போட்டி நடத்த அனுமதி தரவேண்டுமென்று கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கரூர் மாவட்டம் பூலாம்வலசுவில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம். அதே நேரத்தில், சேவல்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது, அதன் கால்களில் கத்தி கட்டப்படாமல் இருப்பது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் விதித்தது. இந்த நிபந்தனைகளை போட்டி ஏற்பாட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, நேற்று (பிப்ரவரி 15) பூலாம்வலசுவில் சேவல் சண்டை போட்டி தொடங்கியது. இதற்காக, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சேவல்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சேவல் சண்டைக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த போட்டி நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. சண்டையிட முடியாத நிலைக்கு ஆளான சேவல் தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியானது இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளையும் இது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.�,