ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவரே மறக்கவேண்டுமென்று நினைக்கும் சம்பவங்களில் மிகமுக்கியமானது கோச்சடையான். கொடுக்கப்பட்ட பில்டப்புகளில் கொஞ்சத்தைக்கூட பூர்த்தி செய்யாமல் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தத் திரைப்படம் கோச்சடையான். முதல் வாரம் தியேட்டரில் படம் இருந்தாலே சக்சஸ் மீட் கொண்டாடும் காலத்தில், தோல்வியை ரஜினி ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய விஷயம். ஆனால், இந்தத் தோல்வியை ஒரே அமுக்காக அமுக்கியது ரஜினியின் சௌந்தர்யா பற்றிய ஸ்டேட்மெண்ட்.
கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் **என் மகள் திரைப்பட இயக்குநராக வெற்றிபெறுவதைவிட, குடும்பத்தை சிறப்பாக வளர்த்து ஒரு தாயாக வெற்றிபெறுவதைத்தான் நான் பெருமையாக நினைப்பேன்** என்று சொல்லியிருந்தார். இது வழக்கமாக ஒவ்வொரு தகப்பனுக்கும் இருக்கும் பாசம் என அப்போது நினைத்தாலும், கோச்சடையானுக்குப்பிறகு ரஜினி நடிப்பில் உருவான லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா, சௌந்தர்யாவின் திரைப்பயணம் குறித்த ரஜினியின் நிலைப்பாடு பற்றிய அனைத்து அனுமானங்களையும் உடைத்தது.
**கோச்சடையான் படத்தில் வேலை செய்ததன்மூலம், சௌந்தர்யா தனக்குத் தேவைப்பட்ட எல்லா அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார். எனவே, இது அவரது குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டிய நேரம் என்று நினைக்கிறேன். இனி அவர் புதியதாக பணம் சம்பாதிக்கத்தேவையில்லை. நான் சம்பாதித்த பணத்தை வீணாக்காமல் இருந்தால், அவர் ஆயுசுக்கும் சம்பாதிக்கவேண்டிய அவசியமே இருக்காது** என்று ஒரு சூப்பர்ஸ்டார் தனது மகளைப்பற்றிப் பொதுமேடையில் பேசியது திரையுலகையே அதிரவைத்தது. அதன்பின் திரையுலகத்திலிருந்து தள்ளியே இருந்த சௌந்தர்யாவின் ரீ-எண்ட்ரி வி.ஐ.பி-2 மூலம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் வி.ஐபி-2 கதையை ரெகமெண்ட் செய்தவரே ரஜினி தான்.
மும்பையில் நடைபெற்ற வி.ஐ.பி-2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் தாணு, **ஒருநாள் ரஜினி எனக்கு ஃபோன் செய்து, வி.ஐ.பி-2 கதையைப் பற்றிச் சொன்னார். அதன்பின் தனுஷிடமிருந்து கதையை வாங்கி இந்தப்படத்தை எடுத்தோம். படத்தை நான் பார்த்துவிட்டேன். சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தின் திரைக்கதையமைத்து இயக்கியிருக்கும் சௌந்தர்யாவின் திறமை, வி.ஐ.பி-2 மூலம் உலகுக்குத் தெரியவரும்** என்று கூறினார்.
தனுஷிடமிருந்த கதையை தாணுவிடம் ரெகமெண்ட் செய்த ரஜினிக்கு, இந்தப்படத்தை இயக்கப்போவது சௌந்தர்யாதான் என்பது தெரியுமோ, தெரியாதோ… டீசர் – டிரெய்லர் – பாடல்களைப் பார்க்கும்போது சௌந்தர்யா ஒரு நல்லப் படத்தை எடுத்து, ரஜினியிடம் தன்னை ஒரு இயக்குநராக நிரூபித்துவிடுவார் என்றே தெரிகிறது.
�,”