uபேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால்: ட்ரம்ப்

Published On:

| By Balaji

விரைவில் வடகொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், அமெரிக்க உளவுப் படைத் தலைவர் போம்பியோ வடகொரியா சென்றுவந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் வுன், சமீபகாலமாக அந்நாடு அணு ஆயுதச் சோதனையில் ஈடுபடுவதை ஊக்குவித்துவந்தார். இதனால், வடகொரியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தது அமெரிக்கா. ஏற்கனவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, கிம் ஜோங் வுன்னைச் சீண்டும் விதமாகக் கருத்து வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதனால், ஒரு கட்டத்தில் இரு நாடுகளுக்குமிடையே போர் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் தென்கொரியாவுடன் நட்பு பாராட்டத் தொடங்கியது வடகொரியா. பிப்ரவரி மாதம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வரும் ஏப்ரல் 27 அன்று வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள் இடையே இரு நாட்டு எல்லைப் பகுதியான பன்முஞ்சோமில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் தென்கொரிய அதிபரைச் சந்திக்கவுள்ள கிம் ஜோங் வுன், அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பையும் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது. அதற்கு அவர் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவின் உளவுப் படைத் தலைவர் மைக் போம்பியோ வடகொரியாவின் பியோங்யாங் நகருக்குச் சென்றதாகத் தகவல்கள் வெளியானது. ட்ரம்ப் – கிம் ஜோங் வுன் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காகவும், அது நடைபெறும் இடத்தை முடிவு செய்வதற்காகவும் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (ஏப்ரல் 18) ப்ளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது குறித்துப் பேசினார். அப்போது, மைக் போம்பியோ வடகொரியா சென்றதை தனது பேச்சில் உறுதிப்படுத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அவருடன் உடனிருந்தார். “அந்த சந்திப்பு பலனளிக்காது என்று கருதினால், உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிடுவோம்” என்று கூறினார் ட்ரம்ப்.

தொடர்ந்து பேசியவர், ஜப்பான் பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். “சந்திப்பு சுமுகமாக நடந்தது; நல்ல நட்புறவு உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான மாநாட்டின்போது அணு ஆயுதத் தடை பரவலாக்கல் குறித்தும் பேசினோம். இது, உலகத்திற்கு நல்ல விஷயம்; வடகொரியாவுக்கும்தான்” என்று குறிப்பிட்டார் ட்ரம்ப்.

வடகொரியா சென்று வந்திருக்கும் போம்பியோவை, சில நாட்களுக்கு முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்தார் ட்ரம்ப். ஆனால், இதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கு முன்னதாக இருந்த ரெக்ஸ் டில்லர்சனை நீக்கிவிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ட்ரம்ப். வடகொரிய அதிபர் கிம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியதை ஏற்றுக்கொண்டதற்காகவே, ரெக்ஸ் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் போம்பியோவின் வடகொரியப் பயணமும், அதன் தொடர்ச்சியாக ட்ரம்ப் கூறியுள்ளதும் முக்கியத்துவம் பெறுகின்றன�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share