விஷ்ணு விஷால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 11) பூஜையுடன் தொடங்கியுள்ளது.
நடிப்புடன் தயாரிப்பிலும் கவனம் செலுத்திவரும் விஷ்ணு அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் ராஜசேகர், நடிகை ஜீவிதாவின் மகளான ஷிவானி, இந்தப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கனவே கும்கி 2 படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி பின் மறுக்கப்பட்டது. அதன் பின் இந்தியில் வெற்றி பெற்ற டூ ஸ்டேட்ஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாகத் தமிழில் களமிறங்குகிறார்.
கிராமப்புற பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. சரண்யா பொன்வண்ணன், பிரபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முனிஷ் காந்த், சிங்கம் புலி, பிரவீன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராகத் தனது பயணத்தை தொடங்குகிறார். திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்குப் பதிலாக ஸ்ரீதர் ஒப்பந்தமாகியுள்ளார்.
விஷ்ணு நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு ஆகிய படங்கள் வரவேற்பு பெற்றன. தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான கதாநாயகன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. எனவே விஷ்ணு நடிப்பதோடு தயாரிக்கவும் செய்யும் இந்தப் படத்தின் வெற்றியை அவர் எதிர்பார்த்துள்ளார். இது தவிர சிலுக்குவார் பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி, ராட்சசன் ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார்.�,