uபாலியல் குற்றங்களை தடுக்க ராஷி கண்ணா யோசனை!

Published On:

| By Balaji

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய தண்டணைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வலம் வந்த ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு படத்தில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியாகியுள்ள இரு படங்களுமே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகளை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளன.

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் சமூகத்தில் தற்போது அதிகளவில் நிகழ்ந்துவரும் நிலையில் இது குறித்து ராஷி கண்ணா கருத்து தெரிவித்துள்ளார். “ஒரு நடிகையாக இது போன்ற படங்களில் நடிக்க முடியும். சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிடமுடியும். ஆனால் இத்தகைய குற்றங்களை நிறுத்துவதற்கோ அல்லது குறைப்பதற்கோ இது போதுமானதாக இருக்காது. நீதித்துறையில் மாற்றங்கள் நிகழவேண்டும். சட்டங்கள் கடுமையாகவும் உடனடியாகவும் இருக்கவேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நடிகர், நடிகைகள் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள். எனவே திரையில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் அது எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் கற்றுவருவதாகவும் ராஷி கண்ணா கூறியுள்ளார்.“தெலுங்கு திரையுலகில் நான்கு ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். தற்போது தெலுங்கு சரளமாக பேசுகிறேன். படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்துவருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன், விஷால் நடிக்கும் அயோக்யா ஆகிய படங்கள் உள்ளன. அயோக்யா படம் இந்த மாதம் 19ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share