ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ராகுல் காந்தி, சரத்பவார் உட்பட முக்கியத் தலைவர்களை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு முன்னெடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சந்திரபாபு நாயுடு இன்று (நவம்பர் 1) டெல்லிக்கு சென்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த ஒரு வாரத்தில் அவரது இரண்டாவது டெல்லி பயணம் இதுவாகும்.
முதலில் டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மாலை 3.30 மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சந்திப்பு குறித்து சரத்பவார் கூறுகையில், “மற்ற எதிர்க்கட்சிகளும் எங்களோடு சேர்வதற்கு அழைப்பு விடுக்க இங்கு வந்துள்ளோம். இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்போம். சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்தார்.
தெலங்கானா சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 14 தொகுதிகளிலும் காங்கிரஸ் 95 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தெலங்கானா தேர்தலில் அமைத்தது போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசுவதற்காகவே ராகுலை சந்திரபாபு நாயுடு சந்தித்ததாக தகவல் வெளியானது.
ராகுல் மற்றும் சந்திரபாபு நாயுடு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.
சந்திரபாபு நாயுடு பேசுகையில், “எதிர்கால திட்டமிடல் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளேன். பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது தொடர்பாக திமுகவிடம் விரைவில் பேசுவோம்” என்று தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு, “நீங்கள் வேட்பாளர் குறித்து ஆர்வமாக இருக்கிறீர்கள். நாங்கள் தேசம் குறித்து ஆர்வமாக உள்ளோம். தேசத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்பதே எங்களின் கொள்கை” என்று பதிலளித்தார்.
“ பாஜகவை தோற்கடிக்க வேண்டும், ஜனநாயகம் மற்றும் தன்னாட்சி அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்பதே முதன்மை நோக்கம். இவற்றைப் பாதுகாக்க இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் முன் உள்ள மிகப்பெரிய சவால்” என்று தெரிவித்த ராகுல், ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டால் எல்லாம் தெளிவாகும் என்றும் குறிப்பிட்டார்.�,”