சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியான ஹுலுவாடி ரமேஷை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் வரை நியமிக்கலாம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 24 நீதிபதிகள் இருந்தனர். இதில், நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் இந்தாண்டு ஒய்வு பெறுகின்றனர். ரஞ்சன் கோகாய் தலைமையிலான 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், 4 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரை செய்தது.
அதன்படி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஆர்.ஷா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்தது கொலீஜியம். அதன்படி, நேற்று (நவம்பர் 2) காலை நான்கு நீதிபதிகள் பதவியேற்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய எண்ணிக்கை 28 ஆக உள்ளது. இன்னும் 3 காலியிடங்கள் உள்ளன.
இதனையடுத்து, காலியாகவுள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு ஹுலுவாடி ரமேஷை மாற்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
**ஹுலுவாடி ஜி.ரமேஷ்**
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ். 1993 பிப்ரவரி 2ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினார்.
2003 செப்டம்பர் 8ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2004 செப்டம்பர் 24ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார்.
அதன் பின்னர், 2015 பிப்ரவரி 16ஆம் தேதியன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.�,