சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தா தன்னை ஆக்கிரமித்ததாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஆண் சாமியார் ஒருவர். மீ டூ மூலமாக, அவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கும் தைரியத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல், பெண் சீடருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது குறித்தும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணையானது, தற்போது பெங்களூரு ராமநகரா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், நேற்று (அக்டோபர் 31) நித்யானந்தா மீது ஆண் சாமியார் ஒருவர் புகார் தெரிவிக்கும் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. “2014ஆம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் எல்லாரது முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன். அது மட்டுமல்லாமல், நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை” என்று அவர் தெரிவித்தார். இதனைச் சொல்வதற்கு, தனக்கு இப்போதுதான் தைரியம் வந்ததாகக் கூறினார்.
மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு வந்துள்ளதாகவும், மீ டூ இயக்கத்தின் மூலமாக இதனைத் தெரியப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீதான ஆண்டாள் சர்ச்சையின்போது, இதே நபர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்திற்குள்ளானது. இந்த நபரைப் போலவே, நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளிநாட்டவர் ஒருவரும் மீ டூ வித் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோவொன்றைப் பதிவிட்டுள்ளார். மீ டூ என்று தொடங்கி, அதன்பின் நித்யானந்தாவின் புகழ் பாடியுள்ளார்.
நித்யானந்தாவின் ஆசிரமத்திலுள்ள பெண்கள் பலர், வைரமுத்து – ஆண்டாள் சர்ச்சையில் தாங்களாக முன்வந்து பல்வேறுவிதமான கருத்துகளை வெளியிட்டனர். தற்போது மீ டூ இயக்கம் குறித்த விழிப்புணர்வு பரவலாகி வரும் நிலையில், இந்த வீடியோக்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.�,