முத்துராசா குமார்
கொட்டாங்குளம் கிராமம்: வாழ்ந்து கெட்ட விவசாய பூமியின் கதை
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையின் யானைமலை பகுதியிலிருந்து சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு, மக்கள் கூட்டம் விவசாயத் தேவைகளுக்காக இடம்பெயர்ந்து போய் உருவாக்கிய ஊர்தான் கொட்டாங்குளம் கிராமம். மதுரையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குத் தப்பித்த வயல் வெளிகளில் இந்தக் கிராமம் இருக்கிறது. இருபது ஏக்கர் பரப்பளவில் ஏழெட்டு ஏக்கரில் மட்டும்தான் குடியிருப்பு வீடுகள். விளைநிலங்களுக்கும், ஆடு, மாடுகள் கட்டிப்போடும் கட்டுத்தறிகளுக்கும், நெற்களங்களுக்கும், வைக்கோல் படப்புகளுக்கும்தான் மீதமிருக்கும் இடங்கள். அறுவடைநெல்லை நூற்றுக்கணக்கான மூட்டைகளில் அள்ளியடைந்த விவசாய செழும்பான கொட்டாங்குளம், இன்று விவசாயம் அழிந்து ஊரைவிட்டு மக்கள் வெளியேறி வாழ்ந்து கெட்டுப் பாடாவதியாய் கிடக்கிறது.
ஆனால், இப்பவும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பதினைந்து பேர் மட்டும் ஊரை விட்டுப் போகாமல் உருக்குலைந்து கிடக்கும் கொட்டாங்குளத்திலேயே வசித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் தாமரைப்பட்டி ஊராட்சியில் வரும் இந்தக் கிராமத்திற்கு பேருந்து வசதிகள், ஆட்டோ வசதிகள் நின்று பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஊரைச் சுற்றி இருக்கும் மூன்று ஊர்களுக்கும் கால்நடையாகத்தான் போக முடியும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் செல்லும் வழித்தடத்தில் வரும் கொடிக்குளம் பாலத்தில் இறங்கி, காயாம்பட்டி வழியாக கருவேலம் காடுகளுக்கு நடுவே கிடக்கும் வறண்ட வரப்புகளில் நடந்தால் கொட்டாங்குளம் வந்துவிடும்.
**கைவிடப்பட்ட பூமி**
ஊருக்குள் நுழைந்தவுடனேயே பாழடைந்த பிள்ளையார் கோயில் இருக்கிறது. ஒரு நீர்த்தேக்கத் தொட்டி, மூடிக் கிடக்கும் கிணறு, இடிந்து வளைந்து தொங்கும் ஒரேயொரு தெருவிளக்கு கம்பம், ஒரு தெருக்குழாய், ஒரு ஜோடி வண்டி மாடுகள், ஒரு ஜோடி ரேக்ளா ரேஸ் மாடுகள், இரண்டு ரேக்ளா வண்டிகள், பசுமாடு, வைக்கோல் படப்பு, செவலை நிற ராஜபாளையம் நாய், கோழிகள், ‘என் குடும்பத்தில் நான் முதல் பட்டதாரி அல்ல, விவசாயி’ என்று எழுதியிருக்கும் பல்சர் பைக். இதுபோக ஆண்கள், பெண்கள் என்று நான்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் அங்கு இருக்கின்றனர். இரண்டு தெருவாக இருக்கும் ஊரில் ஐம்பதறுபது வீடுகள் உள்ளன. எல்லா வீடுகளும் பழமையான முறையில் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மாட்டுக் கொட்டகையும் தண்ணீர் தொட்டியும் இருக்கின்றன.
இப்போது இருக்கும் மக்களின் வீடுகளைத் தவிர பாக்கியிருக்கும் எல்லா வீடுகளும் இடிந்துபோய் பாம்புகள், பூச்சிகள், பறவைகள் அடைந்து கிடக்கின்றன. எங்கும் வௌவால்களின் புழுக்கை வாடைகள் வீசுகின்றன. பொங்கலுக்கு வைத்து காய்ந்து கிடக்கும் கூளைப்பூ கொத்துகளோடு ஓடுகள் சரிந்து, சுவர்கள் இல்லாத வீடுகளில் நிலைக்கதவுகள் மட்டும் கரையான்கள் அரித்து நிற்கின்றன. அடுப்புகள், உரல்கள், தொட்டிகளில் மண்ணும், சருகுகளும் நிரம்பி செடிகள் மண்டிக் கிடக்கின்றன. குவித்து நெல்லளந்த பொட்டல் களங்களில் விரிசல்கள் விழுந்து முட்புதர்களாகிவிட்டன. வெக்கைக் காற்றும், வெறிச்சோடிய ஊரில் நிலவும் அமைதியும் ஒருவித பிரமிப்பையும் பயத்தையும் அளிக்கின்றன.
‘இந்தியத் தேர்தல் ஆணையம், மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி’ என்று என்றைக்கோ தேர்தல் குழுவினரால் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர், 5/17 என்ற உடைந்த கதவில் மங்கிப்போய் தெரிந்தது. அந்தக் கதவின் அருகே உட்கார்ந்து பேசத் தொடங்கினார் கொட்டாங்குளத்தின் பூர்வக்குடி காசிநாதன்.
**மக்கள் வெளியேறிய கதை**
“எனக்கு நாற்பத்தியெட்டு வயசு நடக்குது. நான் பொறந்து வளர்ந்து கல்யாணம் முடிச்சது எல்லாம் இந்த ஊர்லதான். எங்க தாத்தா, பாட்டன்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்குன ஊரு இது. அப்போ ஒவ்வொரு வீட்டுலேயும் அஞ்சாறு பிள்ளைகள் இருக்கும். எல்லாம் சேர்ந்து ஊரவே சுத்தி சுத்தி வந்து விளையாடுவோம். காலம் காலமா விவசாயம் மட்டும்தான் செஞ்சுக்கிட்டு வாறோம். பத்து பதினைஞ்சு ஏக்கர்லாம் சொந்தமா வச்சிருந்த குடும்பம்லாம் இருந்துச்சு. நானூறு மூட்டை நெல் எடுத்த காலமும் இருக்கு. உழவு மாடு, பசு மாடுகன்னு கொறஞ்சது ஒரு குடும்பத்துக்கு இருபது மாடுகளாவது நிக்கும். இப்புடி செல்வ செழிப்பா இருந்த ஊரை நம்பித்தான் பக்கத்து ஊரு சனங்க எல்லாம் வேலைக்கு வருவாங்க. பெரியாறு பாசனம் வழியா கள்ளந்திரி வாய்க்கால்ல தண்ணி ஏறுனாத்தான் விவசாயம் பண்ண முடியும். முன்னாடி நல்லாத்தான் தண்ணி வசதி இருந்துச்சு.
இப்போ பாசனம் வறண்டு விவசாயமும் கொறஞ்சு போச்சு. சுத்து வட்டாரத்துலையும் கல் குவாரிகள் அதிகமா வந்துக்கிட்டு இருக்கு. அப்புறம் எப்படி பொழைக்கிறது. இருபது வருஷத்துக்கு முன்னாடி சின்னச்சாமி குடும்பம் வீடு, வயல்களை விட்டுட்டு வெளியூருக்கு பொழைக்க போனாங்க. அவுங்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல இருந்துச்சு. அப்புறமா வெள்ளையன் குடும்பம் வெளியேறி போயிருச்சு. படிப்படியா மழை இல்லாம போனதுனால விவசாயம் பண்ண முடியல, ஆடு மாடுகளையும் பார்க்க முடியல. குடும்பத்தைப் பார்க்க, புள்ள குட்டிகளைப் படிக்க வெச்சு, ஆளாக்கி கல்யாணம் பண்ணி வைக்க எல்லா நிலத்தையும் வித்துட்டு வீடு வாசலையும் அப்படியே போட்டுட்டு வெளியூர்களுக்கு கிளம்பி போய்டாங்க. இப்படியே மீதி இருக்குற எல்லா குடும்பங்களும் வரிசையா கிளம்பி போய்டாங்க.
இப்போதைக்கு நாங்க மட்டும்தான் இருக்கோம். இருக்குற கொஞ்ச நிலத்துல விவசாயம் பார்த்தும், கூலி வேலைகள் பார்த்துதான் குடும்பத்தைக் காப்பாத்துறோம். இருக்குற ஒரு குழாயில கொஞ்சம் குடிதண்ணீர் வருது. பத்து கிலோமீட்டர் போனால் மேலூர், மதுரைக்கு போயிரலாம். ஆறு கிலோமீட்டர் போனால் ஒத்தக்கடைக்குப் போயிரலாம். பிள்ளைகளோட படிப்புக்கு, ஆஸ்பத்திரிக்கு, ஆத்திர அவசரத்துக்கு அங்கதான் ஓடணும். ஆட்டோ, பஸ் ஏதுமே இல்ல. பைக்குலதான் போயிட்டு வந்துட்டு இருக்கோம்.
இப்போ இருக்குற நாலு குடும்பத்துல இருக்குற பிள்ளைகள் எல்லாரும் பள்ளிக்கூடத்துக்கு போறாங்க. தீபாவளி, பொங்கல், கண்மாய்கரையில இருக்கும் முனியாண்டி கோயில் திருவிழா, நல்லது கெட்டதுகளுக்கு வெளியூர் போனவுங்க எல்லாரும் மறக்காம வந்து அவுங்க வீடுகள்ல சாமி கும்பிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு போவாங்க. இப்பவும் ஒரு தீவுக்குள்ள வாழ்ந்துக்கிட்டு இருக்குற மாதிரிதான் இருக்கோம். இப்போ வரைக்கும் எங்க ஊருல களவு எதும் போனதில்ல. எந்தப் பிரச்சினையும் வந்ததுமில்ல.
சாயந்திரம் ஆனவுடனேயே நாயை அவுத்து விட்ருவேன். முனியாண்டி சாமிதான் மிச்சம் கிடக்குற எங்களையும், இந்த ஊரையும் காத்து நிக்கிறாரு. எனக்குப் பின்னாடி என் பசங்க ரெண்டு பேரும் வெளியில போனால் போகட்டும். நான் சாகுற வரைக்கும் என் ஊருல, என் மண்ணுலதான் இருப்பேன். அப்படித்தான் இந்த நாலு குடும்பமும் இருக்கு” என்று எழுந்து நின்று ஊரை சுற்றிப் பார்த்தபடி பேசினார் காசிநாதன்.
“தாத்தா வழியில இருந்து இங்கு இருக்கேன். எங்க சின்னச்சாமி அப்புச்சி காலத்துல இருந்து அம்பது வருஷமா ரேக்ளா ரேஸ், மஞ்சுவிரட்டுக்குப் போயிட்டு இருக்கோம். மாடுக கூடப் பொறந்த பொறப்பு மாதிரி. என்ன கஷ்டம் வந்தாலும் இந்த மாடுகளை விட்டு என்னால எங்கேயும் போக முடியாது. என் ஊரையும் விட்டு என்னால எங்கேயும் போக முடியாது. வெளியூர் போய் தங்கவும் மனசு கேக்கல. என் பொண்டாட்டி, புள்ளைங்க எல்லாம் ஒத்தக்கடையில இருக்காங்க. மாடுக இங்க இருக்கு. நான் வீட்டுக்கு போயிட்டு உடனே இங்க வந்துருவேன். வந்தவுடனேயே எப்படியாவது மாடுகளை உழவுக்கு ஓட்டி, அதுகளுக்கு தீவனம் போட்டு புள்ள மாதிரி பார்த்துப்பேன். அதுகளுக்கு ஒரு நாளைக்கு முந்நூறு ரூவா செலவாகும். மதுரை, தேனி, புதுக்கோட்டைன்னு பல மாவட்டங்கள்ல நம்ம மாடு பேரு வாங்கிட்டு வந்துருக்கு. எந்த ஊருக்குப் போனாலும் கொட்டாங்குளம் பேரைச் சொல்லித்தான் மாட்டை அவுப்பேன்” என்று சொல்லும் மணிகண்டனிடமும் அவரது மாடுகளிடமும் ஊரின் உருத்து தெறிக்கிறது.
“நான் ஊரை விட்டு வெளியேறி ஒத்தக்கடைக்கு குடிவந்து ஏழெட்டு வருசமாச்சு. கூலி வேலைகளுக்கு போயிட்டு இருக்கேன். விவசாயமும் முன்னாடி மாதிரி இல்ல. ரோடு வசதியும் இல்லாம போச்சு. பக்கத்துல கல் குவாரியும் வந்ததுனால எதும் விவசாயப் பொழப்பும் இல்ல. எல்லாத்தையும் விட்டு வெளிய வந்தாலும் இங்கேயும் பெருசா சம்பாத்தியம்லாம் இல்ல. புள்ளைங்க படிக்கிறாங்க. கடைகளுக்கு மத்த வேலைகளுக்குப் போயிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கு. அதனால கெடைக்கிற வருமானத்துல அப்படியே ஓட்டிக்கிட்டு இருக்கோம். கொட்டங்குளத்துல எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் கெடக்கு. என்னைக்கா இருந்தாலும் திரும்ப ஊருக்கு போகணும். என்னதான் இருந்தாலும் அது நம்ம மண்ணு இல்லையா. வெளியூர் எல்லாம் நமக்கு ரொம்ப நாளைக்கு ஒத்து வராது” என்கிறார் மலைச்சாமி.
**வேட்பாளர்கள் எட்டிப் பார்க்காத ஊர்**
கொட்டாங்குளத்தில் உள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அட்டைகள், ஆதார் அட்டைகள் இருக்கின்றன. ரேஷன் பொருட்கள் வாங்க சிட்டம்பட்டி வரை நடந்தேதான் போய் வர வேண்டும். கரன்ட் பில் கட்டுகிறார்கள். இப்போது இருக்கும் நான்கு குடும்பத்துக்கும் எல்லா அடையாளச் சான்றுகளும் இருக்கின்றன. ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் எதற்கும் எந்த வேட்பாளர்களும் கொட்டாங்குளம் பக்கமே போகவில்லை. ஊரில் இருக்கும் ஒரேயொரு மின் கம்பமும் இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது. அதை சரிசெய்யச் சொல்லிப் பல மாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இது குறித்து நரசிங்கம்பட்டி துணைமின் நிலையம் உதவி பொறியாளரிடம் பேசுகையில், கொட்டாங்குளம் என்ற பெயரே ஆரம்பத்தில் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. பிறகு, “நான் இங்க வந்து வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. கொட்டங்குளம் கிராமத்தோட பிரச்சினைகள் பத்தி இன்னும் சரியா தெரியல. கூடிய சீக்கிரமே அங்க இருக்குற மின்சார பிரச்சனைகளை என்னன்னு பார்த்து சரி பண்ணிறோம்” என்று உறுதியாகக் கூறினார்.
பஞ்சாயத்திலேயே இந்த நிலைமை என்றால் மாவட்ட நிர்வாகங்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொட்டாங்குளம் என்ற பெயரை நினைவில் கொண்டுவந்து பாதையைக் கண்டுபிடிப்பதற்கே காலங்கள் ஓடிவிடும். ஆளும் அதிகாரங்கள் பூர்வக்குடிகளை அவரவர் நிலங்களில் இருந்து வெளிப்படையாகவும், சூட்சமமாகவும் விரட்டியடிக்கும் இந்தச் சூழலில், ‘விவசாயம் இல்லாத ஊரை, எதுக்கு இப்படி காத்துக்கிட்டு கெடக்கணும்னு’ என்ற சுற்று வட்டார மக்களின் பேச்சுகளைப் பொறுத்துக்கொண்டு நான்கு குடும்பங்களும், ரேக்ளா மாடுகளும் தங்களது சொந்த மண் வேர்களை அறுத்தெரியாமல் கொட்டாங்குளத்தையும் அதில் கொஞ்சம் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் கஷ்டங்களோடு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வெளியூர்களுக்குப் போன சொந்தங்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடக்கின்றனர்.
**கட்டுரையாளர் குறிப்பு :முத்துராசா குமார்**
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் M.A,Mphil முடித்துள்ளார். விகடனில் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர். சுயாதீன பத்திரிகையாளராக இயங்கி வருகிறார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகளும் எழுதி வருகிறார்.
�,”