தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் கதிராமங்கலம். முழுக்க விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள ஒரு கிராமம். கடந்த சில வாரங்களாக மீத்தேன் திட்டத்துக்கு எதிராக அந்தக் கிராமத்தில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்கள், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பினர் என பலரும் இணைந்து மீத்தேன் திட்டத்தைக் கைவிடக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராமம் முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டு பொதுமக்கள் சுதந்திரமாக வெளிவரக் கூட முடியாத அளவுக்குக் கடுமையான அடக்குமுறைகளை கையாள்வதாகவும், 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. அதற்கு உச்சகட்டமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கதிராமங்கலத்தில் என்ன தான் நடக்கிறது என்று சென்று பார்த்தோம். அதுகுறித்துக் காண்போம்.
‘கதிராமங்கலம்’ என்ற ஊர்ப்பெயரின் வரலாறே அந்த ஊரின் விவசாய வளத்தை தாங்கி நிற்கிறது. ‘ஒரு காலத்தில் இந்த ஊரில் நெற்கதிரிலிருந்து நெல்லை அடித்து எடுக்காமல் அப்படியே கூரை வேய்ந்துள்ளனர். அந்த அளவுக்கு அங்கு நெல் விளைச்சல் இருந்துள்ளது. அதனால்தான் ‘கதிர் வேய்ந்த மங்கலம்’ என்ற பெயர் உண்டானது. அந்தப் பெயர்தான் காலப்போக்கில் கதிராமங்கலம் என்றானது” என்று அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அப்படியொரு விவசாய செழிப்பு மிக்க பூமி. இன்று ஒரு சொட்டு நீரைக்கூட அந்த ஊரைக் கடந்து செல்லும் காவிரியில் காண முடியவில்லை. காவிரியில் நீர் இருந்ததற்கான அடையாளத்தைக்கூட காண முடியவில்லை. தண்ணீர் இல்லாத வறண்ட காவிரியைக் கடந்து ஊருக்குள் சென்றால், காவல்துறையின் வரவேற்பைத் தாண்டி தான் ஊருக்குள் செல்ல முடியும் என்பதை அறிய முடிந்தது. ஊருக்குள் நுழையும் இடத்தில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பு மக்களுக்கு அல்ல; ஓ.என்.ஜி.சி. அமைத்துள்ள எரிவாயுக் கிணறுகளுக்கு!
காவல்துறையைக் கடந்து ஊருக்குள் சென்றால், அருகிலேயே ஓர் எரிவாயுக் கிணறு கண்ணில்பட்டது. அங்கும் காவல்துறையினர் குவிந்திருந்தனர். கதிராமங்கலம், குத்தாலம் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஏழு எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகளிலிருந்து 15 வருடங்களாக எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள எரிவாயுக் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் குத்தாலம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது புனரமைப்புப் பணி என்ற பெயரில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம், கதிராமங்கலத்தில் உள்ள எரிவாயுக் கிணறுகளுக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளது. இங்குள்ள எரிவாயுக் கிணறுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கும் அளவு குறைந்து விட்டதால் சீரமைப்பு பணிகள் செய்ய வந்ததாக ஓ.என்.ஜி.சி. தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மீத்தேன் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உறிஞ்சப்பட்டு இருக்கிறதென்றால் மண்ணில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்குமா? சுத்தமான தண்ணீர்கூட கிடைக்காத விரக்தியில் இருக்கும் மக்கள், ‘எரிவாயு எடுத்தவரை போதும். இனி எடுக்க வேண்டாம். சீரமைப்பு பணிகளைத் தொடங்கக்கூடாது’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பும் சேர்ந்து இதே கோரிக்கையை வைத்துள்ளது. ஆனால், இவர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதன்பின்னர்தான் மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. நாம் சென்று பார்க்கும்போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வந்துவிட்டார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று வந்த பின்னர் கதிராமங்கலத்தில் இன்றுவரை எந்தப் போராட்டமும் நடைபெறவில்லை.
இயற்கை எரிவாயு திட்டம் குறித்து அன்றைய ஒருநாள் முழுக்க அந்த ஊர் மக்களிடமும், போராட்டக் குழுவினரிடமும், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் த.செயராமன் அவர்களிடமும் பேசினோம். இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு 15 வருடத்துக்கு முன்பு விவசாயிகளிடம் ஒப்புதல் வாங்கும்போது இந்தத் திட்டத்தை அரசுத் திட்டம் என்று பொய்யாகக் கூறி எங்களை ஏமாற்றித்தான் ஒப்புதல் பெற்றதாக கூறுகின்றனர். மேலும், மண்ணெண்ணெய்தான் எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்கள் என்பதும் தெரியவந்தது. முதலில் இந்த ஊரைச் சேர்ந்த, போராட்டத்தில் கலந்துகொண்ட முருகானந்தம் என்பவரிடம் பேசினோம். அவர் கூறும்போது, “நான் கேட்டரிங் தொழில் செய்றேன். ஆசியாவிலேயே மிகப்பெரிய தட்டையான நிலப்பரப்பு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் இந்த மூணு மாவட்டத்துல தான் இருக்கு. இதனால இங்க எப்பவுமே விவசாயம் செழிப்பா இருக்கும். நெல், உளுந்து, பயிர், பருத்தி, வாழை இதெல்லாம் இந்த மண்ணுல நல்லா விளையுது. நருவெளி என்கிற கிராமத்துல விளையுற வாழையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றாங்க. அந்த ஊர்ல ஒரு பிளாண்ட் போட்டு இருக்காங்க. அதுல இதுவரைக்கும் அஞ்சு தடவை தீப்பிடிச்சிருக்கு. அந்த விபத்துல ஒரு பெண்ணுக்கு தீக்காயம் ஆகியிருக்கு. இப்ப அவங்களை எங்கேயோ வெளியே அனுப்பிட்டாங்க. எந்த மீடியாவுக்கும் அவங்கப் பேட்டிகூட கொடுக்க முடியாது. அவ்ளோ மிரட்டி வைச்சுருக்காங்க, இந்த மாதிரி விபத்துல நிறைய ஆடு, மாடுகள் அடிபட்டு செத்து இருக்கு.
எனக்கு இப்ப 63 வயசு ஆகுது. 20 வருஷத்துக்கு முன்னாடி சராசரியா எங்க ஊர்ல நிலத்தடி நீர்மட்டம் 25 அடியில இருந்து 30 அடி வரைக்கும் இருந்துச்சு, ஆனா, எப்ப இவங்க வந்து போர் போட்டு உள்ள வெடி வைச்சு பூமியை பிளந்து ரசாயனத்தை உள்ள செலுத்துனாங்களோ… அதுல இருந்து நிலத்தடி நீர்மட்டம் வேகமா குறைஞ்சிட்டே வருது. இப்ப 120 அடி வரைக்கும் போயிருச்சு. ஆனா, அதுவும் முன்ன மாதிரி சுத்தமா இல்ல. இப்போ இந்த தண்ணிய குடிக்கக்கூட முடியறதில்ல. குடிக்கற தண்ணி எங்களுக்கு கொள்ளிடத்துல இருந்துதான் வருது. கிராமத்து மக்கள் நாங்கள்லாம் அவ்ளோ படிப்பறிவு இல்லாதவங்கங்கறதால எங்களுடைய போராட்டத்தை மொடக்கத்தான் போலீஸ் முயற்சி பண்ணுது. இங்கே இருந்து ஒரு வீடியோ கூட எங்களால போட முடியல. எங்களுக்காக போராட வந்த செயராமன் அய்யாவையும், கூட ஒன்பது பேரையும் சேர்த்து கேஸ் போட்டு ஜெயில்ல போட்டாங்க. அவங்க ஒரு வாரத்துக்கு பிறகு இப்பதான் ஜாமீன்ல வெளிய வந்தாங்க, செயராமன் அய்யாவை இப்ப கதிராமங்கலம் கிராமத்துக்குள்ள வரவும் தடை போட்டு இருக்காங்க. இப்படி பல வழியில போலீஸ்காரங்க எங்களைப் போராட விடாம தடுக்கிறாங்க. நாங்க உயிரோட இருக்கிறவரைக்கும் எங்க மண்ணைக் காக்க கட்டாயம் போராடுவோம்” என்றார்.
அவரிடம் நமது பேட்டியைப் முடித்த பின்னரும், அவருடைய பேச்சு மட்டும் நிற்கவேயில்லை. அவர்கள் ஊரைப் பற்றியும், மீத்தேன் திட்டம் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் எனக்கு காலை உணவையும் கிராம மக்களே வாங்கிக் கொடுத்தனர். அவர்களின் பாசம் உண்மையில் சிலிர்க்கத்தான் செய்தது. காலை உணவை முடித்த பின்னர், மீத்தேன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படுகிறதா? என்பது குறித்து விவசாயி கண்ணனிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசினோம். அவர் கூறும்போது, “தஞ்சையை நெற்களஞ்சியம்னு சொல்லுவாங்க. தமிழ்நாட்டோட மொத்த உற்பத்தில 40% நெல் இங்கதான் விளையுது. இப்படி தமிழ்நாட்டுக்கே சோறு போடுற இந்த ஊரை அழிக்கற மாதிரி இந்த அஞ்சு மாவட்டத்துல (தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி) மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வராங்க. சில சமயம் எங்க ஊர் போர்ல வரத் தண்ணியில எண்ணெய் மாதிரி மிதக்குது. இந்த ஓ.என்.ஜி.சி. போட்டுருக்க போர்ல அடிக்கடி தீ பிடிச்சுக்குது. இதுக்கு பக்கத்துலயே வீடு, பள்ளிக்கூடம், ஓட்டல் கடைகள்லாம் இருக்கு. ஓட்டல்ல ஏற்கனவே அடுப்பு எறிஞ்சிட்டு இருக்கும். அந்த குழாய்ல தீப்பிடிக்கறப்ப ஒருவேளை பரவிட்டா என்ன பண்ண முடியும்? இந்த மண்ணுக்கு விவசாயம் நல்லா வருது. ஆனா, அரசாங்கம் விவசாயத்தை வளர்க்க உதவாம விவசாயத்தை அழிக்கற மாதிரியும், ஓ.என்.ஜி.சி-யைக் காப்பாத்தற மாதிரியும் நடந்துக்குது. போராட்டம் நடந்த ஜூன் 2ஆம் தேதிலாம் எங்க ஊர்ல யாரும் வீட்டை விட்டுக்கூட வெளிய வர முடியல. வீட்டுக்கு வீடு போலீஸ் போட்டிருந்தாங்க. அது இல்லாம ஊருக்குள்ள ஜீப்ல சுத்திட்டே இருந்தாங்க. என்னோட மகன் காலேஜ்ல வேலை பாக்குறாங்க. அவன் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்ப ஊருக்கு வெளிய நின்ன போலீஸ் ரொம்ப நேரம் விசாரிச்சுதான் ஊருக்குள்ளேயே விட்டாங்க. இப்பக்கூட நீங்க வரப்பவே பாத்து இருப்பீங்க. ஊருக்கு முன்னாடி நிறைய போலீஸ் இருந்திருக்கும். எங்க ஊர்ல விவசாயத்தை காப்பாத்த அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்கணும்” என்று வேதனையோடு பேசி முடித்தார்.
சென்ற தலைமுறையிடம் தங்கள் மண்ணைப் பற்றிய ஆதங்கமும், காக்க வேண்டும் என்ற உணர்வும் இவ்வளவு இருக்கும்போது, அந்த ஊரைச் சேர்ந்த இந்த தலைமுறை இளைஞர்கள் மீத்தேன் திட்டம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து அறிய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி மாணவி ஒருவரிடம் பேசினோம். அவர் கூறும்போது, “எம்பேர் பவித்ரா. நான் பி.ஏ இங்கிலீஷ் செகண்ட் இயர் படிக்கறேன். ஓ.என்.ஜி.சி. இங்க ரொம்ப வருசமா இருக்கு. இப்ப சீரமைப்பு பணின்னு சொல்லிட்டு நிறைய மெஷின்லாம் கொண்டு வந்தாங்க. முன்னாடி இங்க மீத்தேன் எடுக்கலைனு தான் ஓ.என்.ஜி.சி. சொல்லிட்டு இருந்தாங்க. முன்னாடி ஜெயலலிதா இருந்தப்ப அரசாங்கத்துக்கிட்ட மீத்தேன் எடுக்க அனுமதி கேட்டு இருந்தாங்க. ஆனா, தமிழ்நாடு அரசாங்கம் 2015-ல் தடை பண்ணி வெச்சிருந்தாங்க. இப்ப அவுங்க இல்லைங்கறதுனால ரகசியமா மீத்தேன் எடுக்க ஓ.என்.ஜி.சி. முயற்சி பண்ணுதுன்னு ஊர்ல எல்லாரும் பேசிக்கிறாங்க. இதனால இந்தப் பகுதியில இருக்க கிராம மக்களுக்கு நிறைய நோய்கள் வரவும் ஆரம்பிச்சிருச்சு. அது இல்லாம இதனால கேன்சர், நுரையீரல் நோய், மலட்டுத்தன்மை இதெல்லாம் அதிகம் வர வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. இப்ப எங்க அம்மாவுக்குக் கூட கேன்சர் வந்திருக்கு” என்றார் வேதனையாக. தொடர்ந்து…
“இந்த மண்ணை மொத்தமா அழிச்சிட்டு எங்கள அகதிகளாக வெளியேற்ற பாக்குறாங்க, அவங்க அனுப்பலனாலும் ஒரு கட்டத்துக்கு மேல வேற வழியில்லாம, நாங்களே இந்த ஊர விட்டு வெளிய போற மாதிரி ஆயிடும். இந்த மீத்தேன் திட்டத்தையும், அதனால வர பாதிப்பையும் பத்தி யாராச்சு எங்களுக்கு சொல்லிக் குடுத்தா காவல்துறை அவங்களை விடறதில்லை. இப்படிதான் அரவிந்துனு ஒரு அண்ணன் எங்களுக்காகப் போராடுனாங்க. அவரை இப்ப காவல்துறை தீவிரவாதின்னு சொல்றாங்க. அவரை அரஸ்ட் பண்ணவும் முயற்சி பண்றாங்க. எப்படியாச்சு போராடி இந்த ஓ.என்.ஜி.சி-யை இங்கே இருந்து வெளிய அனுப்பியே ஆகணும். ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி எங்க ஊர் மக்களோட போராட்டமும் பெருசா மாறணும். அதுக்கு வெளியில இருந்து எல்லாரும் ஆதரவு கொடுக்கணும்” என்ற அவருடைய பேச்சில் மீத்தேன் திட்டம் பற்றி அவர்கள் எல்லாருமே நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது.
– தொடரும்
[பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)
�,”