–
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகக் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று (அக்டோபர் 30) சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவ மழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று அறிவித்தது. நேற்று சென்னையில் ராயபுரம், மண்ணடி, மெரினா கடற்கரை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக நினைத்தனர் சிலர். இந்த சூழலில், இன்று (அக்டோபர் 31) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன். அப்போது, நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாகக் கூறினார்.
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. அப்பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். பின்னர் படிப்படியாக உள்மாவட்டங்கள், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், மகாபலிபுரம் மற்றும் பொன்னேரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.�,”