எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு நான்காம் கட்டமாக 11 ஆயுள் தண்டனை கைதிகளை, புழல் சிறையில் இருந்து இன்று (ஜூன் 26) விடுதலை செய்திருக்கிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது.
அரசியலமைப்பு சட்ட பிரிவு 161ன் படி மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளில் முதற்கட்டமாக 67 பேரைக் கடந்த 6ஆம் தேதி விடுதலை செய்தனர். அதன்பின்னர் 12ஆம் தேதி 52 பேரும், 20ஆம் தேதி 47 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் தமிழக அரசு நான்காவது முறையாக 11 ஆயுள் தண்டனைக் கைதிகளை இன்று விடுதலைச் செய்துள்ளது.�,