விண்வெளியில் இருக்கும் செயற்கை கோள்களை தாக்கும் ஏ-சாட் சோதனையை இந்தியா வெற்றிகரமாக முடித்துவிட்டதாக மார்ச் 27ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த சோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை குறிவைத்து நரேந்திர மோடி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஏ-சாட் ஏவுகணையை சோதித்த நாடாக இந்தியா பெயர்பெற்றுள்ளது. இந்த சோதனையின் மூலம் விண்வெளிப் போட்டியில் இந்தியா தனது முத்திரையை பதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலா என்பதை விசாரிக்க தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, மோடியின் அறிவிப்பு விதிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.�,