uதேசிய மருத்துவ ஆணையம்: வலுக்கும் எதிர்ப்பு!

Published On:

| By Balaji

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக ,அதாவது 1956 முதல் மருத்துவக் கல்வி நடைமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் கையாண்டு வருகிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் மருத்துவ இடங்களை தீர்மானிப்பது போன்றவற்றை இந்திய மருத்துவக் கவுன்சில் கவனித்து வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பை கலைத்து, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்கிற புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2017ஆம் ஆண்டே இதற்கு சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைகுழு பரீசிலனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 16ஆவது மக்களவை நிறைவடைந்ததால் அந்த சட்ட முன் வடிவு காலாவதியாகிவிட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூலை 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த மாணவர்கள் எம்.டி., எம்.எஸ்., போன்ற மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர, எம்.பி.பி.எஸ், இறுதித் தேர்வு, நெக்ஸ்ட் என்ற பெயரில் National Exit Test நாடு முழுவதும் பொதுத் தேர்வாக நடத்தப்படும். இந்த இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தனியாக நுழைவுத் தேர்வு ‘நீட்’ எழுத வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டப்படி, பல்கலைக் கழகங்களை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ மத்திய அரக்கு அதிகாரம் இல்லை. மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட இந்த உரிமையைப் பறிக்கும் வகையில்தான் ‘நிதி ஆயோக்’ பரிந்துரையின்படி பாஜக அரசு, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க ஜூலை 17ல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானித்து உள்ளது.

‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் பயிற்சி மருத்துவராக முடியாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் காத்திருந்து தேர்வுக்குத் தயாராக வேண்டும். நீட் பயிற்சி மையங்கள் போல இதற்கான பயிற்சி மையங்களும் புற்றீசலாகக் கிளம்பி கொள்ளை அடிப்பதற்கு வழி வகுக்கும். ஏழை எளிய, சாதாரண கிராமப்புற மாணவர்கள், ‘நீட்’ தேர்வை எதிர்கொண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், இறுதித் தேர்வான ‘நெக்ஸ்ட்’இல் வடிகட்டப்படும் சூழ்ச்சி இதில் ஒளிந்து இருக்கிறது. பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்பது அரசியல் சாசனத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது ஆகும். 25 பேரை உறுப்பினராகக் கொண்ட தேசிய மருத்துவ ஆணையத்தில் 5 பேர் மட்டுமே மருத்துவர்களாக தேர்வு செய்யப்படுவர். மற்ற 20 பேரும் நியமன உறுப்பினர்கள் ஆவர். ஒரு மாநிலத்துக்குத் தலா ஒரு நியமன உறுப்பினர் வீதம் 29 மாநிலங்கள் மற்றும் 6 ஒன்றியப் பிரதேசங்களிலிருந்து மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள்.

இந்த ஆலோசனைக் குழுவிலிருந்து சுழற்சி முறையில் 6 பேர் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். மருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினராகும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே மாநிலங்கள் தம் தேவைகள் குறித்தும், நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கும் வாய்ப்பே கிடைக்காது. மேலும், இந்த ஆணையத்தின் சார்பில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட நான்கு வாரியங்கள் செயல்படும். இதில் ஒரு வாரியம், மருத்துவக் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்யும். தனியார் ‘மதிப்பீட்டு ’ நிறுவனங்களைக் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்

ஆய்வு மேற்கொள்ளும். அதில் குறைபாடுகள் கண்டறிந்தால், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும். இதனால் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட அதிகத் தொகையை அபராதமாகக் கட்ட வேண்டிய நிலை உருவாகலாம்.

மேலும், மாநில அரசுகள் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவே தயங்கும் சூழல் ஏற்பட்டுவிடும். தேசிய மருத்துவ ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிடவும், முடிவுகளை மாற்றவும், நிராகரிக்கவும் மத்திய அரசுக்கு மித மிஞ்சிய அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆணையத்தைக் கலைக்கவும், மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் தரப்படுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சீரமைத்து, சீரிய முறையில் இயங்கிட முயற்சிக்காமல், அதனை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, மத்திய அரசின் ஏதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது. மருத்துவப் படிப்புகளை முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், ‘நெக்ஸ்ட்’ எனப்படும் ‘தேசிய வெளியேறும் தேர்வை’ கட்டாயமாக்க வழிவகை செய்யும் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவை பாஜக. அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share