இந்த வருடத்தின் மூன்றாவது மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை சந்தித்துள்ளது திருச்சி மாநகரம். தீபாவளி சீசன் ஆரம்பித்துவிட்ட நிலையில் எப்போதும் விழித்திருக்கும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் சுவரை ஓட்டை போட்டு 100 கிலோ மதிப்புள்ள நகைகள் நேற்றிரவு (அக்டோபர் 1) கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை சார்பில் விசாரித்தோம்.
“கடந்த ஜனவரி மாதம் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேற்கூரையில் ஓட்டை போட்டு கொள்ளை நடந்தது. அதன் பின் ஆகஸ்டு மாதம் சிட்டி யூனியன் வங்கியில் கொள்ளை நடந்தது. இப்போது லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் சுவரைத் துளையிட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. பல கோடிரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. பரபரப்பான பகுதியிலிருந்த நகைக் கடையில் இப்படி ஒரு துணிகர சம்பவம் திருச்சி மக்கள், போலீஸாருக்கு மட்டுமல்ல தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கடுமையான அதிர்ச்சியை இன்று காலை ஏற்படுத்திவிட்டது” என்ற தகவல் நமக்குக் கிடைத்தது.
கொள்ளை நடப்பது வழக்கமான செய்தியாகிவிட்ட நிலையில் துணை முதல்வருக்கு மட்டும் ஏன் இந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்?
“ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மூலமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தொழில்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ள விஷயம், ஜெயலலிதா இருக்கும்போதே பரபரப்பாக விவாதிக்கப்பட்டதுதான். அப்படி முதலீடு செய்யப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் லலிதா ஜூவல்லரி நிறுவனமும் ஒன்று என்று சொல்கிறார்கள்.
இதனால்தான் கொள்ளைச் சம்பவத்தைக் கேட்டு துணை முதல்வர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இன்று காலை மாமல்லபுரத்தில் முதல்வரோடு சேர்ந்து பாதுகாப்பு ஆய்வுப் பணியில் ஈடுபட்ட துணை முதல்வர் அதன் பின், தனக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகளுக்கு, ‘திருச்சி ஜூவல்லரி கொள்ளை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி நகைகளை விரைவில் மீட்க உத்தரவிட்டிருக்கிறார்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
திருச்சியில் விடுதியில் தங்கி இருந்து காலி செய்து விட்டுச் சென்றவர்கள், வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பயணித்தவர்கள் என பல கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு அந்த பகுதியில் யார் அதிக நேரம் போன் பேசினார்கள் என்ற விவரங்களைச் சேகரித்து அதனடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நகைக் கடை உரிமையாளர், கிரண் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது உட்பட அவரிடமும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
urltag:trichy-lalitha-jewellary-robbery-ops-shock
�,