தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடைசியாக கடலூர் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு சென்று வந்தார். மாவட்டம் தோறும் அவர் ஆய்வுகள் நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் மறுத்து அறிக்கை விட்ட ஆளுநர் ஜனவரி 2 ஆம் தேதி தஞ்சாவூருக்கு செல்கிறார்.
மத்திய அரசு அமைப்பான தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில், நாட்டுப் புறக் கலைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியான, ‘சலங்கை நாதம்’ வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடக்கிறது. இதை பொதுவாகவே ஆளுநர்கள்தான் துவக்கி வைப்பார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்க வருகிறார் இப்போதைய ஆளுநர் பன்வாரிலால். அதோடு மட்டுமல்ல, ஜனவரி 2 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனு வாங்குகிறார் ஆளுநர்.
இதற்காக ஆளுநரைக் கண்டித்து திமுக கறுப்பு கொடி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது. அதேநிலையில், பெ.மணியரசன் தலைமையிலான தமிழ் தேசிய பேரியக்கம் சுற்றுலா மாளிகையையே முற்றுகை இடப் போவதாக அறிவித்திருக்கிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய தஞ்சை திமுகவின் இளைஞர்கள் சிலர்,
‘’இன்றைக்கு திமுக தமிழகத்தில் வலுவாக இருக்கக் கூடிய முக்கியமான எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆளுநரின் நடவடிக்கைகளை திமுக எதிர்க்கிறது. எப்படி என்றால் சுற்றுலா மாளிகையில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் பேருந்து நிலையம் அருகே திரண்டு கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருக்கிறது திமுக.
அதேநேரம் தமிழ் தேசியத்தை வலியுறுத்திப் போராடும் தமிழ்தேசியப் பேரியக்கம் என்பது திமுகவுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறிய இயக்கம்தான். அப்படிப்பட்ட இயக்கத்தினர் ஆளுநர் மனு வாங்குகிற நேரத்தில் சுற்றுலா மாளிகைக்கே சென்று முற்றுகையிடப் போவதாக அறிவித்திருக்கின்றனர். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு. ஆனால் அவர்களின் போராட்டம் அழுத்தமாக இருக்கிறது. ஆனால், எல்லா வலிமையும் கொண்ட திமுக பேருந்து நிலையம் அருகே கூடி அடையாளப் போராட்டமாக கறுப்புக்கொடி காட்டுகிறது
இதை திமுக சிந்திக்க வேண்டும். திமுகவின் போராட்ட வீரியத்தை நிரூபிக்க வேண்டிய காலகட்டம் இது. வெறும் அறிக்கை, கடிதங்களை விட களப் போராட்டங்களை திமுக தீவிரப்படுத்தினால்தான் மக்களிடையே நம்பிக்கை பெற முடியும். அரை மணி நேர ஆர்பாட்டம், தொலைக்காட்சி கேமராக்களுக்கு எதிரே போர் முழக்கம் என்பதாக போராட்டங்கள் ஆகிவிடக் கூடாது. இதைத் தலைமைக்கு ஊடகங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்கிறார்கள்.
சொல்லிவிட்டோம்!�,